Enable Javscript for better performance
சாலை மேம்பாட்டுத் திட்டத்தை புறநகரில் செயல்படுத்த மோகனூர் மக்கள் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

  

  சாலை மேம்பாட்டுத் திட்டத்தை புறநகரில் செயல்படுத்த மோகனூர் மக்கள் கோரிக்கை

  By நாமக்கல்  |   Published on : 03rd January 2015 04:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மோகனூர் நகரப் பகுதிக்குள், சாலை மேம்பாட்டு திட்டத்தைத் தவிர்த்து புறவழிச்சாலை அமைத்து திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என கடை உரிமையாளர்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  மோகனூர் நகர மக்கள், மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தியிடம் அண்மையில் அளித்த மனு விவரம்: சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மோகனூர் முதல் ராசிபுரம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்போவதாக அறிந்து மகிழ்ச்சி அடைந்தோம். மாநில நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டத்தை வரவேற்கும் அதே நேரத்தில், இத் திட்டத்தில் வாகனப் போக்குவரத்து அதிகரிக்கும் சூழ்நிலை உள்ளது.

  அதன்மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. அவற்றை கருத்தில் கொண்டு மோகனூர் நகரப் பகுதிக்குள் சாலை மேம்பாட்டுத் திட்டத்தைத் தவிர்த்து, புறவழிச்சாலை அமைத்து இத் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

  மோகனூர் நகரில் நகர எல்லைக்குள் நாங்கள் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் வீடுகள், கடைகள், மருத்துவமனைகள், வியாபாரக் கடைகள், கோவில்கள், பேருந்து நிலையம், வாரச் சந்தைக்கு செல்லும் பொதுமக்கள், அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள் பாதிக்கப்படுவர்.

  எனவே, நகர எல்லைக்குள் நான்கு வழிச் சாலை அமைக்காமல் மாற்று வழியில், புறவழிச் சாலையாக மாற்றி, மோகனூர் வட்டார மக்கள் பயன்பெறும் வகையில் மாற்று வழியில் புறவழிச் சாலையாக அமைக்க ஆவன செய்ய வேண்டும்.

  ஆசிரியை வீட்டில் 6 பவுன் திருட்டு

  சேலத்தில் தனியார் பள்ளி ஆசிரியையின் வீட்டுப் பூட்டை உடைத்து 6 பவுன் தங்க நகை திருடப்பட்டுள்ளது.

  சின்ன திருப்பதி சோழர் தெருவைச் சேர்ந்தவர் துரைராஜ் (41). இவர் சிதம்பரத்தில் தங்கி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மேல்படிப்பு படித்து வருவதாகக் கூறப்படுகிறது. இவரது மனைவி ரூபாதேவி (38), தனியார் பள்ளி ஆசிரியை.

  கடந்த புதன்கிழமை வீட்டைப் பூட்டி விட்டு ரூபாதேவி, தனது தங்கை வீட்டுக்குச் சென்று விட்டு வெள்ளிக்கிழமை காலை வீட்டுக்குத் திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பது தெரியவந்தது.

  பீரோவில் வைத்திருந்த 6 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டுப் போனது தெரியவந்தது.

  இதுதொடர்பாக ரூபாதேவி அளித்த புகாரின்பேரில் கன்னங்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  இளம்பெண் சாவில் மர்மம்:கோட்டாட்சியர் விசாரணை

  சேலம் கிச்சிப்பாளையத்தில் இளம்பெண் மரணம் தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

  கிச்சிப்பாளையம் காந்திமகான் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணன், பெயிண்டராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி (23). இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதிக்கு குழந்தை இல்லையாம்.

  இது தொடர்பாக கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனிடையே வியாழக்கிழமை இரவு ஜெயந்தி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.

  இதுபற்றி தகவலறிந்த கிச்சிப்பாளையம் போலீஸார் ஜெயந்தியின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

  இந்த நிலையில் ஜெயந்தியின் தந்தை மாது, கிச்சிப்பாளையம் போலீஸில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது மகள் ஜெயந்திக்கு குழந்தை இல்லாதது தொடர்பாக அவரது கணவர் குடும்பத்தினர் அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளனர். எனவே, தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாகவும், முறையாக விசாரிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து வருவாய் கோட்டாட்சியர் லலிதாவதி மற்றும் காவல்துறை உதவி ஆணையர் தினகரன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai