Enable Javscript for better performance
குமாரபாளையம் விசைத்தறியாளர்கள் ஜன. 11 முதல் வேலை நிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    குமாரபாளையம் விசைத்தறியாளர்கள் ஜன. 11 முதல் வேலை நிறுத்தம்

    By குமாரபாளையம்,  |   Published on : 06th January 2015 04:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மின்கட்டண மானியம் வழங்கக் கோரி குமாரபாளையத்தில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறிகளின் உரிமையாளர்கள் வரும் 11-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

    குமாரபாளையம் கொங்கு விசைத்தறி உரிமையாளர்கள் சங்க அலுவலகத்தில் விசைத்தறி உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

    கூட்டத்துக்கு, கொங்கு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கே.எஸ்.பழனிச்சாமி தலைமை வகித்தார். செயலர் ராமசாமி, பொருளர் சுந்தரராஜ் முன்னிலை வகித்தனர்.

    அனைத்துத் தரப்பினரின் எதிர்ப்பையும் மீறி தமிழக அரசு 15 சதவீத மின் கட்டண உயர்வை அறிவித்துள்ளது. இதனால், பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விசைத்தறிகளுக்கு மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் அல்லது மின் கட்டண உயர்வுத் தொகையை அரசே மானியமாக வழங்கி விசைத்தறித் தொழிலைப் பாதுகாக்க வேண்டும்.

    இக்கோரிக்கையை வலியுறுத்தி ஏற்கெனவே மின் கட்டணம் செலுத்த மறுத்துப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    தமிழக அரசு விசைத்தறிகளுக்கு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை மானியமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. ஆனால், இதற்கான உத்தரவை மின்சார ஒழுங்கு முறை ஆணையத்துக்கு வழங்கவில்லை. இதனால் மின்வாரியம், விசைத்தறிகளுக்குக் கூடுதல் கட்டணம் விதித்து, வசூலித்து வருகின்றது. எனவே, மின்கட்டண மானியம் வழங்கக் கோரி வரும் 11-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என கூட்டத்தில் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.

    நாமக்கல் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள், சின்னப்பநாயக்கன்பாளையம் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் மற்றும் விசைத்தறிக் கூட உரிமையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட கூட்டுக்குழுக் கூட்டத்தில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai