சுடச்சுட

    

    நாமக்கல் மாவட்டத்தில் 13.24 லட்சம் வாக்காளர்கள்

    By நாமக்கல்,  |   Published on : 06th January 2015 04:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 13 லட்சத்து 23 ஆயிரத்து 752 வாக்காளர்கள்உள்ளனர்.

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான சிறப்பு சுருக்க முறைத் திருத்த இறுதி வாக்காளர் பட்டியல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி. வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் இரா.சுப்புலட்சுமி பெற்றுக் கொண்டார்.

    மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான 2015-ஆம் ஆண்டு சிறப்பு சுருக்க முறைத் திருத்த இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    கடந்த 15.10.2014 முதல் 10.11.2014 வரை பெறப்பட்ட பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் குறித்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு 1.1.2015-ஐத் தகுதி நாளாகக் கொண்டு இந்த வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 15.10.2014-ல் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 12 லட்சத்து 96 ஆயிரத்து 539 வாக்காளர்கள் இருந்தனர். இப்போது 35,632 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டும், 8,419 வாக்காளர்கள் பட்டியலிருந்து நீக்கப்பட்டும் உள்ளனர்.

    15,825 இளம் வாக்காளர்கள்: புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள 35,632 வாக்காளர்களில் 18 முதல் 19 வயது வரை 9,078 ஆண், 6,746 பெண், ஒரு திருநங்கை என மொத்தம் 15,825 இளம் வாக்காளர்கள் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    வாக்காளர் பட்டியலில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள 35,632 வாக்காளர்களுக்கும் வரும் 25-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள தேசிய வாக்காளர் தினத்தன்று புகைப்படத்துடன் கூடிய வண்ணப் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளன. அப்போது அந்தந்த வாக்குச் சாவடி மையங்களில் புதிய வாக்காளர்கள் அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம்.

    பொதுமக்கள் அந்தந்த வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி மையங்களில், வாக்காளர் பட்டியலைப் பார்வையிட்டு அதில் பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும் என்றார்.

    மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் செ.சாந்தி, தனி வட்டாட்சியர் (தேர்தல்) ரா.சந்திரமாதவன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்கள் வாக்காளர் பட்டியல் வெளியீட்டில் பங்கேற்றனர்.

    தொகுதி வாரியாக

    வாக்காளர்கள் எண்ணிக்கை விவரம்ராசிபுரம் தொகுதியில் 1,07,179 ஆண், 1,08,883 பெண், 1 திருநங்கை என மொத்தம் 2,16,063 வாக்காளர்கள், சேந்தமங்கலம் தொகுதியில் 1,11,918 ஆண், 1,14,483 பெண், 4 திருநங்கை என மொத்தம் 2,26,405 வாக்காளர்கள், நாமக்கல் தொகுதியில் 1,16,499 ஆண், 1,20,548 பெண், 25 திருநங்கை என மொத்தம் 2,37,072 வாக்காளர்கள் உள்ளனர்.

    பரமத்திவேலூர் தொகுதியில் 1,00,968 ஆண், 1,05,753 பெண், ஒரு திருநங்கை என மொத்தம் 2,06,722 வாக்காளர்கள், திருச்செங்கோடு தொகுதியில் 1,05,028 ஆண், 1,07,498 பெண், 19 திருநங்கை என மொத்தம் 2,12,545 வாக்காளர்கள், குமாரபாளையம் தொகுதியில் 1,11,910 ஆண், 1,13,024 பெண், 11 திருநங்கை என மொத்தம் 2,24,945 வாக்காளர்கள் உள்ளனர். 6 சட்டப் பேரவைப் தொகுதிகளிலும் 6,53,502 ஆண், 6,70,189 பெண், 61 திருநங்கை என மொத்தம் 13,23,752 வாக்காளர்கள் உள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai