சுடச்சுட

  

  வரும் பிப்ரவரி மாதம் 10-ஆம் தேதி மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்கள் முன் கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.

  தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநிலக் குழுக் கூட்டம், மாநிலத் தலைவர் ஏ.எம். முனுசாமி தலைமையில் நாமக்கல்லில் திங்கள்கிழமை நடைபெற்றது. பொதுச் செயலர் கே.முகமது அலி பேசினார்.

  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ஆவினில் கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை முறைகேட்டில் ஈடுபட்ட பால் டேங்கர் லாரி ஒப்பந்ததாரர், ஊழியர், கீழ் நிலை அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கொள்முதல் விலை ரூ.5 உயர்த்திய பின், எதிர்பார்த்தபடி ஆவின் பால் கொள்முதல் உயரவில்லை. ஆவின் பால் கொள்முதலை அதிகரிக்க, கால்நடைத் தீவனம் 50 சதவீத மானிய விலையில் வழங்க வேண்டும். கர்நாடக மாநிலத்தைப் போல், தமிழக அரசு லிட்டர் ஒன்றுக்கு ரூ.4 வீதம் ஊக்கத் தொகை வழங்க வேண்டும். ஆரம்ப சங்கங்களின் மேம்பாட்டுக்கு லிட்டருக்கு ரூ.1 வீதம் மானியம் வழங்க வேண்டும். ஆவின் நிறுவனத்தில் பால் திருட்டு மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளைத் தடுக்க வேண்டும்.

  மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் பிப்ரவரி 10-ஆம் தேதி மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்கள் முன் கறவை மாடுகளுடன் பால் உற்பத்தியாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

  சங்கச் செயலர் எம். சிவாஜி, மாவட்டத் தலைவர் ஏ.ஆர். முத்துசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் பி. பெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai