சுடச்சுட

  

  இன்றைய சூழ்நிலையில் மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்குரைஞர்கள், தொழிலதிபர்கள் போன்றவர்களை உருவாக்குவதைவிட சிறந்த மனிதர்களை நாம் உருவாக்கிட வேண்டும் என, குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார் தெரிவித்தார்.

  ராசிபுரம் எஸ்ஆர்வி ஹைடெக் மகளிர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில், பள்ளித் தலைவர் ஏ.ராமசாமி தலைமை வகித்தார். செயலர் பி.சுவாமிநாதன் வரவேற்றார்.

  இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற பொன்னம்பல அடிகள் மேலும் பேசியது: இன்றைய நிலையில் மாணவர்கள் எந்த நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றனர் என எண்ணிப்பார்க்க வேண்டும். இன்றைய இளைய தலைமுறை, கற்றவர் கற்றதன் பாதையில் சிந்தித்துச் செயல்பட வேண்டும். நன்கு படித்தவர்களைவிட மனிதாபிமானம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். சக மாணவர்களை கொலை செய்யும் கொலைக் களமாக கல்விக் கூடங்கள் உருவாகி வருகின்றன. இந்த நிலை மாற வேண்டும். அதற்கேற்றவாறு கல்விக் கூடங்கள் செயல்பட வேண்டும்.

  நாம் கற்ற கல்வி, நமக்கு மட்டுமல்ல நம் நாட்டுக்கும், சமுதாயத்துக்கும் பயன்பட வேண்டும். அந்த அளவுக்கு சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

  தாமஸ் ஆல்வா எடிசன் மின் விளக்கை கண்டுபிடிக்க எவ்வளவு முறை முயன்றார். எப்படி முயன்றார் என எண்ணிப்பார்க்க வேண்டும். நேற்றைய உலக துன்பத்தை எது மாற்றிக் காட்டுகிறதோ அதுதான் அறிவு. மாணவர்கள் கல்விசார் உலகம் படைக்க வேண்டும். அதற்கேற்றவாறு புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும். நண்பர்கள்கூட நட்டாற்றில் விட்டுவிடுவார்கள். ஆனால், உலகமே கைவிட்டாலும், தனி சிறையில் இட்டாலும் நம்மை விட்டு விலகாத உறவுதான் புத்தகம் என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.

  மனித ஆத்மாவை மகாத்மாவாக உயர்த்திக் காட்டியது புத்தகம்தான். அமெரிக்க வரலாற்றில் 47 பக்கங்கங்களுடன் வெளியிட்ட நாளிலேயே 3 லட்சம் பிரதிகள் விற்பனையான புத்தகம்தான் அந்நாட்டின் விடுதலைக்கு அடிகோலியது. இது தான் புத்தகப் புரட்சி. மேலும், கருப்பின மக்களுக்கு ஏற்பட்ட கொடுமை உள்நாட்டுப் போராக மாறி விடுதலைப் பெற்றுத் தந்ததற்கு காரணம் புத்தகம்தான். உலகத்தைப் புரட்டிப் போட்டது புத்தகங்கள்தான்.

  தீபாவளி, பொங்கல் என்றால் புத்தாடைகள் வாங்கும் நாம், சரஸ்வதி பூஜை என்றால் இவ்வளவு அற்புதங்கள் நிகழ்த்தும் புத்தகத்தை வாங்க வேண்டும். மனிதன் வாழ்க்கையில் உயர்வதற்கான அளவு, அவர்களது எண்ணம்தான் உயரம். எந்த அளவு உயர்வாக எண்ணகிறார்களோ அந்த அளவு வாழ்வில் உயர்வார்கள். வாழ்வில் உயர்ந்து விட்டோம் என எண்ணி நின்றுவிடக் கூடாது. உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். எவ்வளவு உயரத்தில் உயர்ந்தாலும் பெற்றோர்களை மறந்துவிடக் கூடாது. தேசம், மொழி தாண்டி மனிதநேயம் வளர்த்திட வேண்டும் என்றார்.

  விழாவில், மாணவியர்களின் கலாசார கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழாவில் பள்ளி துணைத் தலைவர் எம்.குமரவேல், பொருளாளர் எஸ்.செல்வராஜன், அறக்கட்டளை இயக்குநர் ஏ.ராமசாமி, இணை செயலர் பி.சத்தியமூர்த்தி, முதல்வர் பி.வள்ளியம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai