சுடச்சுட

  

  சமுதாயத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தவே கோயில்கள் ஆட்சியர் பேச்சு

  By நாமக்கல்  |   Published on : 10th January 2015 10:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சமுதாயத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தவே கோயில்கள் கட்டப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.

   தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே சாமிசெட்டிப்பட்டி கந்தசாமி முருகன் கோயில் பிரச்னை தொடர்பாக இருதரப்பினரிடையே, கடந்த நவம்பர் 24-ஆம் தேதி பிரச்னை ஏற்பட்டது. இதில் ஒரு பிரிவினர் போலீஸாரின் அனுமதியை மீறி ஊர்வலம் சென்றனர். இதுதொடர்பாக 75 பெண்கள் உள்பட 233 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. அதில் 46 பேர் கைது செய்யப்பட்டனர்.

   இந்த வழக்கில் பிணை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்த நிலையில் நீதிபதி பிரகாஷ் குற்றம் சாட்டப்பட் 46 பேருக்கும் நிபந்தனைப் பிணை  வழங்கினார். அதில், கடந்த டிசம்பர் 19-ஆம் தேதி முதல் ஜனவரி 8-ஆம் தேதி வரை, 21 நாள்கள் திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் தங்கியிருந்து மன ஒருமைப்பாட்டுப் பயிற்சி எடுக்க உத்தரவிட்டார்.

   மன ஒருமைப்பாட்டுப் பயிற்சி எடுத்த 46 பேருக்கும் பயிற்சி நிறைவு விழா காந்தி ஆசிரமத்தில் வியாழக்கிழமை நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மதுரை காந்தி அருங்காட்சியக துணைத் தலைவரும், காந்தி ஆசிரமத் தலைவருமாகிய  கே.லட்சுமிகாந்தன் பாரதி தலைமை வகித்தார்.

   மாவட்ட சார்பு நீதிபதி என்.பாரி முன்னிலை வகித்தார்.  காந்தி ஆசிரம கெüரவத் துணைத் தலைவர் எஸ்.ஆராவமுதன் வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி, நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.ராமதிலகம் ஆகியோர் பயிற்சி பெற்ற 46 பேருக்கும் சான்றிதழ்கள் மற்றும் மகாத்மா காந்தி எழுதிய என் வாழ்க்கைக்கதை என்ற புத்தகத்தையும் வழங்கினர்.

   இதில் ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி பேசியது: சமுதாயத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தவும், நமக்கு ஏற்படும் சில பிரச்னைகள், மன அமைதியின்மை ஆகியவற்றைப் போக்கிக் கொள்ளவும், குறைகளை இறைவனிடம் தெரிவித்து மன அமைதி பெறவும்தான் முன்னோர்கள் கோயில்களை உருவாக்கித் தந்துள்ளனர். 

   கடவுளின் முன் அனைவரும் சமம் என்பதை நாம் முழுமையாக உணர்ந்து கொள்ள வேண்டும். இதில் உயர்வு, தாழ்வு, பெரியவர், சிறியவர், ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இருக்கக்கூடாது.  இந்தக் கோயில் எங்களுக்குத்தான் சொந்தம் என்று கூறுவதும், அதனை மற்றொரு தரப்பினர் ஏற்க மறுப்பதும் அதனால் பிரச்னைகள் ஏற்படுவதும் வருந்தத்தக்க செயல்.

   கடவுளை வழிபடுபவர்கள் மனப்பூர்வமாக வழிபடுங்கள். மனிதர்கள் அனைவரையும் நேசியுங்கள். அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யுங்கள். மற்றவர்களுக்கு உதவி செய்யும்போது கிடைக்கும் ஆத்ம திருப்திக்கு ஈடு இணை ஏதுமில்லை. ஒவ்வொருவரும் மற்றவருக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்திட வேண்டும். அதேபோல ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு வாழ்க்கையில் உயர்வதற்கு முயற்சிக்க வேண்டும். மற்றவர்களை உயர்த்துவதற்கும் நாம் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார். 

   காந்தி ஆசிரமச் செயலர் கே.சின்னுசாமி, எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் எ.துரைசாமி, மல்லசமுத்திரம் மகேந்திரா கல்வி நிறுவனங்களின் தலைவர் எம்.ஜி.பரத்குமார், காந்தி ஆசிரம கௌரவ சட்ட ஆலோசகர் ஆர்.குமார்,  தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமைகள் புலனாய்வுக் குழுத் தலைவர் எஸ்.செல்வம், கஸ்தூரிபா கல்வியியல் கல்லூரி முதல்வர் சிதம்பரம்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai