Enable Javscript for better performance
முட்டை கொள்கலன்களை துறைமுகத்தில் மறுசோதனை செய்வதைக் கைவிட ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    முட்டை கொள்கலன்களை துறைமுகத்தில் மறுசோதனை செய்வதைக் கைவிட ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை

    By நாமக்கல்  |   Published on : 10th January 2015 10:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முட்டை கொள்கலன்களைத் துறைமுகத்தில் மறுசோதனை செய்வதைக் கைவிடவேண்டும் என ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாய வர்த்தக சங்க மாநிலச் செயலர் பி.வி.செந்தில், தூத்துக்குடி துறைமுக ஆணையருக்கு அனுப்பிய மனு விவரம்:

    நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கோழிப்பண்ணையாளர்கள் தூத்துக்குடி துறைமுகம்  வழியாக பல்வேறு நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்கின்றனர்.

    ஏற்றுமதிக்கு அனுப்பப்படும் முட்டைகள், மத்திய சுங்கத்துறை அதிகாரிகள் மூலம் சீல் வைக்கப்பட்டு குளிர்சாதன கண்டெய்னர் லாரிகள் மூலம் பண்ணைகளிலிருந்து துறைமுகங்களுக்கு அனுப்பப்படுகின்றன. அங்கு உள்ள ஸ்கேனிங் மூலம் கண்டெய்னர்கள் ஆய்வு செய்யப்பட்டு நேரடியாகக் கப்பலுக்கு அனுப்பப்பட்டு வந்தது.

     இப்போது கடந்த சில மாதங்களாக, இங்கிருந்து போகும் முட்டை கண்டெய்னர்கள், துறைமுகத்தில் மறுசோதனையிடப்படுகின்றன. பண்ணைகளிலேயே ஏற்கெனவே மத்திய சுங்கத்துறை அதிகாரிகளால் சான்று வழங்கப்பட்ட கண்டெய்னருக்கு மீண்டும் அங்கு சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சான்று வழங்குகின்றனர்.

     இந்த நடைமுறை நிறைவடைய சுமார் 12 மணி நேரம் வரை ஆகிறது. இந்த நேரத்தில் கண்டெய்னர்களில் உரிய அளவு குளிர்சாதன வசதி இல்லையெனில் முட்டைகள் கெட்டுவிட வாய்ப்புள்ளது. காலதாமதம் காரணமாக உரிய நேரத்தில் முட்டை கொள்கலன்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கவும் முடியவில்லை. இதனால் முட்டை ஏற்றுமதி வர்த்தகம் தொடர்ந்து சிறப்பாக நடைபெற, ஏற்கனவே இருந்த நடைமுறையைத் தொடர உரிய நடவடிக்கையெடுக்க வேண்டும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai