சுடச்சுட

  

  பல்வேறு நெருக்கடிகள், தொழில் போட்டிகளால் லாரி போக்குவரத்துத் தொழில் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது.

  நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருள்கள், சரக்குகள், பெட்ரோலியப் பொருள்களைப் பாதுகாப்பாகவும், விரைவாகவும் எடுத்துச் செல்லும் பணிகள் 80 சதவீதத்துக்கும் மேல் லாரிகள் மூலமாக மேற்கொள்ளப்படுகின்றன. நாமக்கல்லில் மட்டும் சுமார் 60 ஆயிரம் லாரிகள் இயக்கப்படுகின்றன.

  தமிழகத்தில் 4 லட்சம் லாரிகள் சரக்குப் போக்குவரத்துத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பல லட்சம் தொழிலாளர்கள் ஓட்டுநர்களாகவும், உதவியாளர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.

  கடந்த சில ஆண்டுகளாக லாரிப் போக்குவரத்துத் தொழில் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது.

  குறிப்பாக, கடந்த 5 ஆண்டுகளில், லாரி டயர்களின் விலை ரூ.30 ஆயிரத்திலிருந்து ரூ.45 ஆயிரம் ஆகவும், டீசல் விலை லிட்டர் ரூ.40-இல் இருந்து ரூ.60 வரையும் உயர்ந்தது. உதிரிப் பாகங்களின் விலை 50 சதவீதத்துக்கும் அதிகமாகவும், 3-ஆம் நபர் காப்பீட்டுத் தொகை 50 சதவீதம் வரையும் உயர்த்தப்பட்டுள்ளன.

  மத்திய, மாநில அரசுகளுக்குத் தனித்தனியாக சாலை வரி செலுத்தப்பட்ட போதும், சுங்கச் சாவடிகள் மூலம் பெருமளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால், கனரக லாரி போக்குவரத்துத் தொழில் பெரும் பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது.

  இதற்கிடையே, ஓட்டுநர் பற்றாக்குறையால் நாமக்கல்லில் சுமார் 20 சதவீத லாரிகள் இயங்காமல் நிறுத்தப்பட்டுள்ளன.

  லாரி தொழிலில் தொடர்ந்து நெருக்கடிகள் அதிகரித்தபோதும், போட்டிகளும் அதிகரித்துள்ளதால் கட்டணத்தை உயர்த்துவதிலும் சிக்கல் நிலவுவதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

  இதுகுறித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் கே.நல்லதம்பி கூறியது:

  லாரி போக்குவரத்துத் தொழிலைப் பாதுகாக்க, சுங்கச் சாவடிக் கட்டணத்தையும், 3-ஆம் நபர் காப்பீட்டுத் தொகை உயர்வையும் அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

  சரக்குக் கட்டணத்தை அரசே நிர்ணயம் செய்யவும், மாநில எல்லைகளில் எடை மேடை அமைத்து அதிகச் சுமையை ஏற்றிச் செல்வதைக் கட்டுப்படுத்தவும் வேண்டும்.

  அடிக்கடி டயர், உதிரிப் பாகங்கள், டீசல் விலை உயர்த்தப்படுவதையும் கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.

  லாரி ஓட்டுநர்கள் பற்றாக்குறை ஏன்? லாரி ஓட்டுநர்கள் பற்றாக்குறை குறித்து முன்னணி லாரி தயாரிப்பு நிறுவனத்தின் நாமக்கல் கிளை அதிகாரி ஒருவர் கூறியது:

  லாரி ஓட்டுநர்களுக்குப் பாதுகாப்பு குறித்த பயம் அதிகரித்துள்ளது. இதைத் தவிர்க்க நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் ஒரு நெட்வொர்க் அமைக்க வேண்டும். லாரி ஓட்டுநர்களுக்கு 8 மணிநேரம் மட்டுமே வேலை கொடுக்க வேண்டும்.

  உதாரணமாக, நாமக்கல்லில் இருந்து தில்லிக்கு செல்லும் லாரியை 8 மணி நேரம் மட்டுமே இங்கிருந்து செல்லும் ஓட்டுநர் ஓட்ட வேண்டும். அதன்பிறகு, லாரியை அந்த நெட்வொர்க்கிலுள்ள இன்னொரு ஓட்டுநர் அடுத்த எட்டு மணிநேரம் ஓட்ட வேண்டும். முதல் ஓட்டுநர் வேறு வண்டியை எடுத்துக் கொண்டு, தான் வந்த இடத்துக்குத் திரும்புவார்.

  இதுபோன்று தொடர்ந்து ஓட்டுநர்களை உபயோகப்படுத்த வேண்டும். இதற்கு லாரி உரிமையாளர்கள் முயற்சி எடுத்தால் ஓட்டுநர் பற்றாக்குறையை தீர்க்க வாய்ப்புள்ளது என்றார் அவர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai