Enable Javscript for better performance
மகளிர் சுய உதவிக் குழுவினர் பெற்ற கடனைத் திருப்பி செலுத்துவதிலும் நாமக்கல் முதலிடம்- Dinamani

சுடச்சுட

    

    மகளிர் சுய உதவிக் குழுவினர் பெற்ற கடனைத் திருப்பி செலுத்துவதிலும் நாமக்கல் முதலிடம்

    By நாமக்கல்  |   Published on : 13th January 2015 04:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மகளிர் சுய உதவிக் குழுவினர் பெற்ற சுழல் நிதி மற்றும் கடன் தொகையைச் திருப்பிச் செலுத்துவதிலும் நாமக்கல் மாவட்டம் முதலிடத்தில் உள்ளதாக தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.

    மாவட்ட ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ஆடு, மாடு வளர்ப்பதற்கான சுழல்நிதி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். நாமக்கல் எம்பி பி.ஆர்.சுந்தரம், எம்எல்ஏக்கள் கே.பி.பி.பாஸ்கர், ஆர்.சாந்தி முன்னிலை வகித்தனர்.

    மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு சுழல் நிதி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் பி.தங்கமணி பேசியது:

    நாமக்கல் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேம்பாட்டுத் திட்டம் வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை, எருமப்பட்டி, மோகனூர், பரமத்தி, கபிலர்மலை, நாமக்கல், சேந்தமங்கலம் மற்றும் கொல்லிமலை வட்டாரங்களில் 108 நீர்வடிப்பகுதிகளில் செயல்படுத்தப்படுகிறது.

    ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் சார்பில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் 235 பண்ணைக் குட்டைகள், 55 கசிவு நீர்க் குட்டைகள், 340 தடுப்பணைகள், 68 கால்நடைக் குட்டைகளும் 210 வரத்துக் கால்வாய் சீரமைப்புப பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2014-15-ஆம் நிதியாண்டில் ரூ.6.19 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

    கடந்த மூன்றரை ஆண்டுகளில் மகளிர் குழுக்களுக்கு மட்டும் ஏறத்தாழ ரூ.1.50 கோடி சுழல்நிதி மற்றும் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

    அதனைப் பெற்ற மகளிர் குழு உறுப்பினர்கள் முறையாக அதைத் திருப்பிச் செலுத்துவதிலும் நாமக்கல் மாவட்டம் முதலிடம் பெற்று வருகிறது.

    கடந்த ஆட்சியில் கரும்புக்கான விலை டன்னுக்கு ரூ.2,000 வழங்குவதாக அறிவித்து அதையும் முழுமையாக வழங்க முடியவில்லை. சர்க்கரையும் கிலோ ரூ.46-க்கு விற்கப்பட்டது. ஆனால் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் கரும்பு கொள்முதல் விலையை டன் ஒன்றுக்கு ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்க உத்தரவிட்டார்.

    விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தற்போது கரும்பு கொள்முதல் விலை ஒரு டன்னுக்கு ரூ.2,500லிருந்து ரூ.2,650-ஆக உயர்த்தி வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. சுயவிளம்பரத்திற்காக சிலர் கரும்பு விவசாயிகளிடம் தவறான பிரசாரங்களைப் பரப்பி வருகின்றனர். விவசாயிகள் நலனில் அரசு எப்போதும் அக்கறையுடன் இருக்கும் என்றார்.

    வேளாண் இணை இயக்குநர் லோகநாத பிரகாசம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) எம்.கிருஷ்ணகுமார், வேளாண்மை துணை இயக்குநர் சுப்பிரமணியன், நாமக்கல் நகர்மன்றத் தலைவர் இரா.கரிகாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai