ரூ.3 ஆயிரம் லஞ்சம்: ராசிபுரம் நகராட்சி உதவியாளர் கைது
By ராசிபுரம் | Published on : 13th January 2015 04:22 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ராசிபுரம் நகராட்சியில் உதவியாளர் ஒருவர் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
ராசிபுரம் நகராட்சியில் உதவியாளராகப் பணியாற்றி வருபவர் ஜி.சந்திரசேகரன் (50). சில தினங்களுக்கு முன் புதிய பஸ் நிலையத்தில் பழக்கடை நடத்திவரும் மாது (49) என்பவர், கடையின் குத்தகை உரிமத்தைப் புதுப்பிப்பது தொடர்பாக உதவியாளர் சந்திரசேகரனை அணுகினாராம்.
உரிமத்தைப் புதுப்பிப்பதற்காக ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம் ஜி.சந்திரசேகரன். இதனையடுத்து மாது, நாமக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் புகார் தெரிவித்தார்.
போலீஸாரின் வழிகாட்டுதலின் பேரில், சந்திரசேகரனை நகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை சந்தித்த மாது, ரூ.4 ஆயிரத்துக்குப் பதிலாக ரூ.3 ஆயிரம் உள்ளதாகக் கூறி பணம் கொடுத்தாராம்.
அப்போது அங்கிருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சந்திரசேகரனை பணத்துடன் பிடித்தனர்.
சந்திரசேகரனிடம் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி.,செல்வம் தலைமையிலான போலீஸார் அவரைக் கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.