Enable Javscript for better performance
அரசுக்கு எதிரான போராட்ட அறிவிப்புக்கு லாரி சங்கங்கள் எதிர்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    அரசுக்கு எதிரான போராட்ட அறிவிப்புக்கு லாரி சங்கங்கள் எதிர்ப்பு

    By நாமக்கல்,  |   Published on : 15th January 2015 03:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போக்குவரத்துத் துறை அமைச்சரை எதிர்த்துப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ள லாரி சங்கத்துக்கு நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மாநில நிலையில் உள்ள சங்கங்களைச் சேர்ந்த லாரி, மணல் லாரி உரிமையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

    கனரக வாகனங்களில் அதிகளவில் சரக்கு ஏற்றிவிடும் நிறுவனங்களுடன் அதிகாரிகள் கைகோத்து உள்ளதால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்படுகிறது. இதை தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தடுக்கவில்லை என்று கூறி, அவரைக் கண்டித்து வரும் 19-ஆம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்தப் போவதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநில பொதுச் செயலர் முருகன் அறிவித்திருந்தார்.

    இந்த நிலையில், நாமக்கல்லில் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் கே.நல்லதம்பி, மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்ல.ராசாமணி ஆகியோர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது:

    பெயரளவில் சங்கம் நடத்தும் சிலர் கடந்த 2 நாள்களுக்கு முன்பு தமிழகத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர்களையும், மணல் லாரி உரிமையாளர்களையும் குழப்பும் வகையில் தமிழக அரசின் செயல்பாட்டைக் கண்டித்தும், போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் செயல்பாட்டை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்ததைக் கண்டிக்கிறோம்.

    மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வேண்டுகோளை ஏற்று ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தமிழகத்தில் உள்ள அனைத்து மோட்டார் வாகன ஆய்வாளர்களும் இரவில் சோதனை செய்து அதிக சுமை ஏற்றுகின்ற லாரிகளை பிடித்து அபராதம் விதிக்கின்றனர்.

    இதைக் குறைகூறும் வகையில் சிலர் செயல்படுவதுடன், ஒவ்வொரு ஊரிலும் லாரி உரிமையாளர்கள் சங்கங்களைப் பிளவுபடுத்தி வருகின்றனர்.

    அவர்கள் போராட்டம் நடத்தினால், அதில் எங்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் பங்கேற்க மாட்டார்கள். மேலும், இதுபோன்ற செயல்களை மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனமும், மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனமும் வன்மையாகக் கண்டிக்கிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர் அவர்கள்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai