Enable Javscript for better performance
தொடக்கக் கல்வி பட்டய தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் - Dinamani

சுடச்சுட

    

    தொடக்கக் கல்வி பட்டய தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

    By நாமக்கல்  |   Published on : 17th January 2015 03:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் ஜெயராமன் வெளியிட்ட செய்தி: வரும் ஜூன் மாதம் நடைபெறும் தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் விண்ணப்பங்களை இணையத்தில் ஒன்று முதல் நான்கு பக்கம் வரை பதிவிறக்கம் செய்து, தேர்வரின் தகுதி, அறிவுரைகளைப் பின்பற்றி, நிறைவு செய்த விண்ணப்பத்துடன், ஏற்கெனவே தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் நகலை இணைத்து மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நேரடியாகச் சென்று சமர்ப்பிக்க வேண்டும்.

    மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள வெப் கேமரா மூலம் புகைப்படம் எடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளதால், அந்த நிறுவனங்களிலேயே புகப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து கொண்ட பின்னர், அங்கேயே தேர்வுக் கட்டணம் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.

    தனித் தேர்வர்கள் அலைச்சலின்றி எளிதாக விண்ணப்பத்திட சம்பந்தப்பட்ட மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜனவரி 19 முதல் 24ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் நாளை கத்தி போடும் விழா

    ராசிபுரத்தை அடுத்துள்ள சீராப்பள்ளி சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் கத்தி போடும் விழாஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 18) நடைபெறுகிறது.

    இந்தக் கோயிலின் விழா கொடியேற்றத்துடன் கடந்த ஜனவரி 7-இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, ஜனவரி 12-இல் சக்தி அழைத்தல், சாமுண்டி எடுத்தல், மகரஜோதி போன்றவை நடைபெற்றன. ஜனவரி 14-இல் அம்மன் அச்சு வெல்லம் பெறுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஞாயிற்றுக்கிழமை விக்னேஸ்வர பூஜையும், கோ, அஸ்வ, கஜ பூஜையும், மஹா கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், லட்சுமி குபேர பூஜையும் நடைபெறவுள்ளது. வீர குமாரர்கள் வீரமுஷ்டி அலகு சேவை செய்து கத்தி போடும் நிகழ்ச்சியும், அம்மன் சக்தி அழைத்தலும், அன்னதானமும் நடைபெறவுள்ளது.

    ஜன.19-இல் தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்

    தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம், அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியம் ஆகியவற்றில் உறுப்பினர் சேர்க்கை முகாம் ராசிபுரம் அருகே உள்ள குருசாமிபாளையத்தில் ஜனவரி 19ஆம் தேதி நடைபெறுகிறது.

    குருசாமிபாளையம் பாவடி செங்குந்தர் சமுதாயக் கூடத்தில் இந்த முகாம் நடைபெறுகிறது. இதில், கட்டடத் தொழிலாளர்கள், உடல் உழைப்புத் தொழிலாளர்கள் பங்கேற்று, தங்களது பெயரைப் பதிவு செய்து, வாரியம் சார்பில் வழங்கப்படும் நலத் திட்ட உதவிகளைப் பெற்று பயனடைய வேண்டும் என, மாவட்டத் தொழிலாளர் அலுவலர் சி.மஞ்சள்நாதன் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai