சுடச்சுட

    

    நீர் ஆதாரங்களின் பயன்பாட்டை முறைப்படுத்த குழுக்கள்

    By நாமக்கல்,  |   Published on : 17th January 2015 03:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீர் ஆதாரங்களின் பயன்பாட்டை முறைப்படுத்த குழுக்களை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.

    மத்திய நீர்வள நதி மேம்பாடு, கங்கை புனரமைப்பு அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி, நீரைச் சேமிப்பது, நீர்நிலைகளைப் பாதுகாப்பது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் ஆட்சியர் பேசியது: நாமக்கல் மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 4432.1 சதுர கி.மீ. மொத்த மக்கள்தொகை 2011-இன் கணக்கெடுப்பின்படி, 17 லட்சத்து 21 ஆயிரத்து 179. சராசரி மழையளவு 770.50 மி.மீ. ஆனால், கடந்த பல ஆண்டுகளாக சராசரிக்கும் குறைவாகவே மழை பெய்துள்ளது. இந்த ஆண்டில் சுமார் 620 மி.மீ. மழை பெய்துள்ளதால், சில இடங்களில் நீர்நிலைகளில் தண்ணீர் அதிகரித்துள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 90 சதவீதம் காவிரியில் வருகின்ற தண்ணீரைத்தான் விவசாயத்துக்கும், குடிநீருக்கும், வீட்டு உபயோகத்துக்கும் பயன்படுத்தப்படுகிறது.

    நிலத்தடி நீரிலிருந்து 10 சதவீதம் தண்ணீர்தான் கிடைக்கப் பெறுகிறது. கிடைக்கின்ற நீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் கோடைகாலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும்.

    நீரைச் சேகரிக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் மழை நீரைச் சேகரிக்க வேண்டும். மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்குவதில் நாமக்கல் மாவட்டம் முன்னோடி மாவட்டமாக விளங்குகிறது.

    மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் மழைநீர் கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. 99 சதவீத தனியார் பள்ளிகள், நிறுவனங்கள், ஆலைகளிலும் மழைநீர் கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

    பொதுமக்களிடம் பண்ணைக்குட்டைகள் அமைப்பது குறித்தும், நீர்நிலைகள், நிலங்கள் மாசுபடாதவாறு பேணுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதோடு அதற்கான வழிமுறைகளை அனைத்து அலுவலர்களும் செயல்முறைப்படுத்த வேண்டும்.

    கடந்த ஆண்டின் கணக்கெடுப்பின்படி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, வேளாண்மைத் துறை, வேளாண்மைப் பொறியியல் துறையின் வாயிலாக 1,100-க்கும் மேற்பட்ட பண்ணைக்குட்டைகள் அமைக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளன. இந்த ஆண்டும் தொடர்ந்து இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஒவ்வொரு ஊராட்சியிலும் உள்ள ஏரிகளைக் கண்டறிந்து, அந்த ஏரிகளில் ஆண்டு முழுவதும் நீர் தேங்கும்படி மேம்படுத்தி, ஏரிகளை தூர்வாரி புனரமைப்பதோடு, நீர்வரத்துக் கால்வாய்களை மராமத்துச் செய்து மழைக் காலங்களில் நீர்வரத்து இருக்கும்படி செய்து, அந்த ஏரிகளை மாசுபடாமல் தடுக்கும் பொருட்டு, நீர் பயனீட்டாளர் குழுக்களை அமைக்க ஆவன செய்து, கோடை காலங்களிலும் தண்ணீர் பிரச்னை இல்லாமல் செய்திட திட்டமிடப்பட்டுள்ளது.

    நீர் பயனீட்டாளர்கள் தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்ந்து நீர் பாதுகாப்பு முறைகளையும், சரியான நீர் மேலாண்மையையும் கையாள பயிற்றுவிப்பதோடு, நீர் ஆதாரங்கள் நீண்ட காலங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்படி செய்து, "நமது நீரே நமது உயிர்' என்ற உணர்வோடு செயல்பட வேண்டும் என்றார்.

    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் ( பராமரிப்பு) பெரியசாமி பிரகலாதன், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai