ராசிபுரம், பரமத்திவேலூரில் திருவள்ளுவர் தின விழா
By ராசிபுரம்/பரமத்திவேலூர், | Published on : 17th January 2015 03:34 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ராசிபுரம், பரமத்திவேலூரில் திருவள்ளுவர் தின விழா கொண்டாடப்பட்டது.
ராசிபுரத்தில் திருவள்ளுவர் அரசுக் கலை அறிவியல் கல்லூரியின் திருவள்ளுவர் மன்றம் சார்பில், திருவள்ளுவர் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவில், கல்லூரி முதல்வர் டி.ஆர்.கணேசன் தலைமை வகித்தார். கல்லூரியின் அரசியல் அறிவியல் துறை இணைப் பேராசிரியர் ஆர்.சிவக்குமார் வரவேற்றார். கல்லூரி உடல்கல்வி இயக்குநர் கோ.ராஜகோபால் முன்னிலை வகித்தார்.
பின்னர், வர்ணம் பூசப்பட்டு, புதுப் பொலிவுபடுத்தப்பட்ட கல்லூரி வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், "திருவள்ளுவரும், தன்னம்பிக்கையும்' என்ற தலைப்பில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியிலும், "திருக்குறள் காட்டும் வாழ்க்கை நெறிகள்' என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியிலும், திருவள்ளுவர் குறித்த ஓவியப் போட்டியிலும் பங்கேற்று, வெற்றி பெற்றவர்களுக்கு கல்லூரி முதல்வர் டி.ஆர்.கணேசன், அண்ணாமலை பல்கலைக்கழக அரசியல் அறிவியல், பொது நிர்வாகத் துறை இணைப் பேராசிரியர் பி.சக்திவேல், பேராசிரியர் பெ.துரைசாமி ஆகியோர் பரிசுகளும், சான்றிதழ்களையும் வழங்கிப் பேசினர்.
விழாவில், முன்னாள் மாணவர்கள் வெ.சந்திரசேகரன், வழக்குரைஞர் சக்திவேல், சே.யுவராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதேபோல, பட்டணம் தமிழன்பன் சமூக அறக்கட்டளை சார்பில், பட்டணம் பகுதியில் நடைபெற்ற திருவள்ளுவர் தின விழாவில், ஆர்.நாகேந்திரன் தலைமை வகித்தார். அறக்கட்டளை தலைவர் ஆர்.கரிகாலன் முன்னிலை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் ஆர்.சித்தைய்யன், சி.செல்வராஜு, மதியழகன், ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்று, திருவள்ளுவர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பரமத்திவேலூரில்...: பரமத்திவேலூரில் தமிழ்ச் சங்க அறக்கட்டளை சார்பில், காமராஜர் சிலை அருகே திருவள்ளுவரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்ச் சங்க அறக்கட்டளை தலைவர் ரவீந்திரன், செயலாளர் பாலகிருஷ்ணன், பொருளாளர் செந்தில்குமரன், துணைத் தலைவர் இக்பால், உறுப்பினர்கள், அரிமா சங்கத்தினர், நாங்கள் இலக்கியகத்தினர், தமிழ் ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.