Enable Javscript for better performance
வரதட்சிணை கேட்டு மனைவியைத் தாக்கிய கணவர் உள்பட 2 பேர் கைது- Dinamani

சுடச்சுட

  

  வரதட்சிணை கேட்டு மனைவியைத் தாக்கிய கணவர் உள்பட 2 பேர் கைது

  By நாமக்கல்  |   Published on : 18th January 2015 03:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வரதட்சிணை கேட்டு மனைவியைத் தாக்கியதாக கணவர் உள்பட 2 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

  திருச்சி மாவட்டம், தாத்தையங்கார்பேட்டை அருகே அஞ்சலம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி மகள் பிரியா (27). இவருக்கும் மோகனூர் அருகே குத்தாங்கல்மேட்டைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவரது மகன் சரவணனுக்கும் (41) கடந்த 2009-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 2 பெண் குழந்தைகள், ஓர் ஆண் குழந்தை உள்ளனர்.

  சரவணன் மோகனூரில் இரும்புக் கடை வைத்துள்ளார். அந்தக் கடையில் வேலை பார்த்துவரும் தொட்டியம் அருகே முருங்கை கிராமத்தை சேர்ந்த பரமசிவம் என்பவரது மகள் பிரியா (26) என்பவருக்கும், சரவணனுக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும், இதன்பிறகு சரவணன் தன் மனைவியோடு பிரியாவையும் அதே வீட்டில் தங்க வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

  இந்நிலையில் சரவணன், மனைவி பிரியாவிடம் வரதட்சிணை கேட்டுக் கொடுமைப்படுத்தி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட பிரியா நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

  இதுகுறித்து, பிரியா அளித்த புகாரின்பேரில் மோகனூர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து சரவணன் (41), அவருடன் வாழ்ந்து வரும் பிரியா ஆகிய இருவரையும் கைது செய்தனர். சரவணனின் தந்தை வேலுச்சாமியை தேடி வருகின்றனர்.

  பொங்கல் விளையாட்டுப் போட்டிகள்

  : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில், காவல் அதிகாரிகள், காவலர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான, விளையாட்டுப் போட்டி ஆயுதப்படை வளாகத்தில் அண்மையில் நடந்தது.

  எஸ்.பி எஸ்.ஆர். செந்தில்குமார் போட்டிகளைத் தொடக்கி வைத்தார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. ஏஎஸ்பி சந்திரமோகன், டிஎஸ்பிக்கள் மனோகரன், ராஜீ, ராமசாமி, உதயகுமார், தனிப்படை காவல் ஆய்வாளர் ஆரோக்கியராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  தூசூரில் மருத்துவ முகாம்

  நாமக்கல் அருகே தூசூர் ஊராட்சி ஒன்றிய நடு

  நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சிறப்பு மருத்துவ முகாம் அண்மையில் நடந்தது.

  தூசூர் ஊராட்சித் தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். அலங்காநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் செந்தில்குமார் வரவேற்றார். திட்டத்தின் நோக்கம், சிறப்பு மருத்துவம் மற்றும் சுற்றுப்புற சுகாதாரம் குறித்து வட்டார மருத்துவ அலுவலர் லலிதா பேசினார்.

  குழந்தைகள், கண், மகப்பேறு, சித்தா, பல் சிறப்பு மருத்துவர்கள் முகாமில் பங்கேற்று ஆலோசனை வழங்கினர். முகாமில், 110 தாய்மார்களுக்கு இலவச ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், இசிஜி, கண்புரை சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இதில் மேல்சிகிச்சைக்காக 6 நபர்கள் பரிந்துரைக்கப்பட்டனர். முகாமில் 1,000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

  மின்தடை மாற்றம்

  நாமகிரிப்பேட்டை துணை மின் நிலையத்தில் வரும் திங்கள்கிழமைக்குப் பதிலாக (ஜன. 19) செவ்வாய்க்கிழமை (ஜன. 20) மின்சாரம் தடை செய்யப்படும் என நாமகிரிப்பேட்டை மின் வாரிய உதவி செயற்பொறியாளர் மா.வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

  நாமகிரிப்பேட்டை துணை மின் நிலையப் பகுதிகளில் வரும் திங்கள்கிழமை (ஜன. 19) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. உள்ளூர் பண்டிகை மற்றும் பொதுமக்கள் நலன் கருதி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்ட மின்தடை செவ்வாய்க்கிழமைக்கு (ஜன. 20) மாற்றப்பட்டுள்ளது.

  திருமலைக்கு மலர் அனுப்ப விருப்பமா?

  திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் உற்சவ விழாவிற்கு மலர் அனுப்புவதற்காக ராசிபுரத்தில் மலர் தொடுக்கும் விழா வரும் ஜன.24-இல் நடைபெறுகிறது.

  கொங்கணாபுரம் திருமலை திருப்பதி ஸ்ரீமன் நாராயணா நித்ய புஷ்ப கைங்கர்ய சபா அறக்கட்டளை சார்பில், ராசிபுரம் சௌராஷ்ட்ரா விப்ரகுல பஜனை மடத்தில் நடைபெறும் மலர் தொடுக்கும் விழாவில், பக்தர்கள் வழங்கும் மல்லி, சாமந்தி, ரோஜா, மேரிகோல்ட், துளசி, அரளி, மருவு, தாமரை, சம்பங்கி உள்ளிட்ட 4 டன் மலர்களும், கரும்பு, தென்னம்பாளை, தென்னங்குருத்து, பாக்கு குலை, இளநீர், மாங்காய் போன்றவையும் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான மலர்களை பக்தர்கள் வழங்கலாம் என அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலர்கள் வழங்க விருப்பமுள்ள பக்தர்கள் 97873 93939, 94435 15497 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

  பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்: மதுரை ஆதீனம்

  தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என மதுரை ஆதீனம் வேண்டுகோள் விடுத்தார்.

  நாமக்கல் மாவட்டம், வேட்டாம்பாடி பிஜிபி கல்வி நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் அவர் பேசியது:

  தமிழர்களின் பாரம்பரியம், கலாசாரத்தைப் பறைசாற்றுவது பொங்கல் திருநாள். உலகத்திலுள்ள ஒட்டுமொத்த தமிழர்கள் கொண்டாடும் வகையில், நமது முன்னோர்கள் உருவாக்கிய பண்டிகையே பொங்கல் பண்டிகை.

  இனம், மொழி, ஜாதியை கடந்து கொண்டாட வேண்டியது காணும் பொங்கல். பாரம்பரியத்தை மாற்றக் கூடாது, எப்போதும் மரபுகளையும் சட்டங்களையும் மாற்றக் கூடாது. சித்திரை முதல் தேதியே தமிழ்ப் புத்தாண்டு. இதை ஜெயலலிதாவிடம் தெரிவித்தோம்; அதன்படி அவர் அறிவித்தார்.

  திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். திருக்குறளை முன்னிறுத்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தருண் விஜய் எம்.பி.யைப் பாராட்டுகிறேன்.

  மதுவிலக்கைக் கொண்டு வர வேண்டும் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன் என்றார் மதுரை ஆதீனம்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai