Enable Javscript for better performance
1.50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து - Dinamani

சுடச்சுட

    

    1.50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து

    By நாமக்கல்,  |   Published on : 18th January 2015 03:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 1,198 சிறப்பு முகாம்களில் 1.50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து ஞாயிற்றுக்கிழமை(ஜன.18) வழங்கப்படவுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமில் ஐந்து வயதிற்குள்பட்ட 1 லட்சத்து 51 ஆயிரத்து 498 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது. அதைப் போலவே இந்த ஆண்டும் ஞாயிற்றுகிழமை நடைபெறவுள்ள தீவிர போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாமில் 1.50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

    போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்குவதற்காக கிராமப் புறங்களில் 1,079 சிறப்பு முகாம்கள், நகராட்சிப் பகுதியில் 119 சிறப்பு முகாம்கள் என மொத்தம் 1,198 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து, ரயில் நிலையங்கள், சந்தைகள், திரை அரங்குகள், கோயில்கள், சுங்கச் சாவடிகள் போன்ற பல்வேறு இடங்களில் 48 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாடோடிகள், நரிக்குறவர்கள், கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகள் மற்றும் போக்குவரத்து வசதி இல்லாத மலை கிராமங்களில் உள்ள குழந்தைகள் பயன்பெறும் வகையில் 36 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு போலியோ தடுப்பு சொட்டு மருந்துகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன.

    இப்பணிக்காக பொது சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், சத்துணவுத் திட்டத்துறை, பள்ளிக்கல்வித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை, ரோட்டரி சங்கம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் தன்னார்வலர்கள் என சுமார் 4,935 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அரசு வழங்கும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து தரமானது, வீரியமிக்கது, பாதுகாப்பானது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ளவர்கள் தங்கள் வீடுகளில் உள்ள பிறந்த குழந்தைகள் முதல் 5 வயதிற்குள்பட்ட அனைத்துக் குழந்தைகளையும் முகாமிற்கு அழைத்து வந்து தவறாமல் போலியோ தடுப்பு சொட்டு மருந்து போட்டுக் கொள்ள வேண்டும்.

    ஏற்கெனவே, போலியோ தடுப்பு சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் அக்குழந்தைகளுக்கும் மீண்டும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள முகாம்களில் அளிக்கப்படும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கி போலியோ இல்லாத சமுதாயத்தை உருவாக்க முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai