சுடச்சுட

    

    சர்க்கரை ஆலைகளில் கிடப்பில் போடப்பட்ட மின் உற்பத்தி திட்டம்

    By நாமக்கல்  |   Published on : 22nd January 2015 03:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திட்டம் அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகளானபோதும், செயல்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள, பொதுத் துறை, கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

    கரும்பில் இருந்து சர்க்கரையை எடுத்த பிறகு எஞ்சியிருக்கும் சக்கையில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இதன்படி, தமிழகத்தில் உள்ள 18 தனியார் சர்க்கரை ஆலைகளில் 10 ஆலைகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. ஒவ்வோர் ஆலையும் மணிக்கு 40 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்கின்றன.

    இந்த ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு யூனிட்டுக்கு கொள்முதல் விலையாக, ரூ.5 வரை தரப்படுவதாகக் கூறப்படுகிறது.

    தமிழகத்தில் 18 பொதுத் துறை, கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் உள்ளன.

    இதில், எந்த ஓர் ஆலையிலிலும் இதுவரை மின் உற்பத்தி தொடங்கப்படவில்லை. இந்த ஆலைகள் அனைத்திலும் மின் உற்பத்தி நடைபெற்றால், தமிழகத்தின் மின் பற்றாக்குறையை ஓரளவு நிறைவு செய்யலாம்.

    இதில், கிடைக்கும் லாபத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை, கரும்புக்கு கூடுதல் கொள்முதல் விலையாகக் கொடுக்கலாம். நிதிப் பிரச்னையில் தள்ளாடும் ஆலைகள் மீண்டு வரவும் வாய்ப்பு ஏற்படும்.

    இதை, விவசாயிகள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தததை அடுத்து, கடந்த திமுக ஆட்சியில் 2009-ஆம் ஆண்டு முதல் கட்டமாக 12 பொதுத் துறை, கூட்டுறவு ஆலைகளில் மின் உற்பத்தி தொடங்கத் திட்டமிடப்பட்டது.

    மின் வாரியம் மூலம் பணிகள் தொடங்கப்பட்டு, அதிகபட்சமாக 18 மாதங்களில் பணிகள் முடிக்கப்பட்டு, மின் உற்பத்தி தொடங்கப்படும் என அப்போது அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை ஓர் ஆலையில் கூட மின் உற்பத்தி தொடங்கப்படவில்லை.

    நாமக்கல் மாவட்டம், மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மின் உற்பத்தி நிலையம் அமைக்க சுமார் ரூ. 80 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு, மின் வாரியம் மூலம் பணிகள் தொடங்கப்பட்டன. திட்ட மதிப்பில் 10 சதம் விவசாயிகளும், 10 சதம் சர்க்கரை ஆலையும் பங்குத் தொகையாக வழங்கப்பட்டது. பங்குத் தொகையான ரூ. 16 கோடியை மின் வாரியத்திடம் வழங்கப்பட்டு, நான்கு ஆண்டுகளானபோதும், இந்தத் தொகை கிணற்றில் போட்ட கல்லாகவே கிடக்கிறது. மின் உற்பத்தி தொடங்கப்படாததால், விவசாயிகளுக்கு ஈவுத்தொகையும், வட்டியும் கிடைக்கவில்லை.

    இந்த ஆலைக்கு அருகே உள்ள பெரும்பாலான கிராமங்களில், மிக மோசமான மின் வெட்டு தொடர்கிறது. இங்கு மின் உற்பத்தி நடைபெற்றால், தங்கள் கிராமங்களுக்குத் தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில்தான், இந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பங்குத் தொகையாகப் பணம் கொடுத்தனர்.

    இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறியது:

    தமிழகத்தில் முதன்மையான பிரச்னையாக மின் பற்றாக்குறை உள்ளது. நீர், காற்றாலை ஆகியவற்றின் மூலம் சில மாதங்கள் மட்டுமே மின்சாரம் கிடைக்கிறது. நிலக்கரிப் பற்றாக்குறையால், அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி அடிக்கடி பாதிக்கப்படுகிறது. அணுமின் உற்பத்தியை மக்கள் விரும்பவில்லை.

    பொதுத் துறை, கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகள் அனைத்திலும் உடனடியாக மின் உற்பத்தியைத் தொடங்குவதன் மூலம் ஆண்டுக்கு 6 மாதங்கள் வரை மணிக்கு சுமார் 400 முதல் 600 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்ய முடியும்.

    இதன்மூலம், பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும், ஒளிமயமான வாழ்வு கிடைக்கும். காற்றும், தண்ணீரும், நிலக்கரியும் அவ்வப்போது கிடைக்காமல் போகலாம். ஆனால், கரும்புச் சக்கை எப்போதும் கிடைக்கும். இதன்மூலம் மக்களுக்கு குறைந்த விலையில் சர்க்கரையும் கிடைக்கும் என்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai