Enable Javscript for better performance
காகித ஆலை விரிவாக்க கருத்துக்கேட்பு கூட்டத்தில் தள்ளுமுள்ளு - Dinamani

சுடச்சுட

    

    காகித ஆலை விரிவாக்க கருத்துக்கேட்பு கூட்டத்தில் தள்ளுமுள்ளு

    By நாமக்கல்  |   Published on : 23rd January 2015 02:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பள்ளிபாளையத்தில் உள்ள தனியார் காகித ஆலை விரிவாக்கம் தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டத்தில் சுற்றுசூழல் பாதுகாப்பு அமைப்பினர் மற்றும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி பகுதியில் சேசாய் என்ற தனியார் காகித ஆலை உள்ளது. அந்த ஆலை கடந்த 1960ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. அந்த ஆலையில் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், ஆலையை விரிவாக்கம் செய்ய நிர்வாகம் முடிவு செய்தது.

    இதுதொடர்பாக மக்களின் கருத்துகேட்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி வியாழக்கிழமை காலை காகித ஆலை வளாகத்தில் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கருத்துக்கேட்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.

    கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். ஆலை நிர்வாக தலைவர் கோபால் மற்றும் மாவட்ட சுற்றுச்சுழல் பொறியாளர் முருகன், மக்கள் தன்னார்வலர்கள் பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆலை விரிவாக்கம் சம்மந்தமாக மக்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். அதில் சிலர் ஆலை விரிவாக்கம் செய்வதால் விவசாயம் பாதிப்படையும். மேலும், ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் காவிரிó நீர் மாசுபடுகிறது என புகார் எழுப்பினர்.

    அந்த புகாரை ஆதரித்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் முகிலன் பேசினார். அப்போது, காகித ஆலை நிர்வாகத்தினர் நாளொன்றுக்கு 8 ஆயிரம் லிட்டர் வீதம் காவிரியில் இருந்து தண்ணீர் எடுக்கின்றனர். எனினும் சுத்திகரிப்பு செய்யப்படாமல் ஆலையில் இருந்து கழிவு நீரை வெளியேற்றுகின்றனர். அதனால் காவிரி நீர் மாசுபடுவதுடன், நிலத்தடி நீரும் மாசடைகிறது. மேலும், அதை பயன்படுத்தும் மக்களும் புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடுகிறது என புகார் எழுப்பினார்.

    அப்போது குறுக்கிட்ட ஆட்சியர், கருத்துக்கேட்பு கூட்டத்தில் பலரும் பேச வேண்டியுள்ளதால், பேச்சை சுருக்கமாக கூறி முடிக்கும்படி அறிவுறுத்தினர். எனினும், முகிலன் தொடர்ந்து பல்வேறு முன்னுதாரணங்களை மேற்கோள்காட்டி பேசியபடி இருந்தார்.

    அப்போது அங்கிருந்த காவல் துறையினர் அவரிடம் இருந்த மைக்கை வாங்க முற்பட்டபோது, இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின் அவர் மற்றும் சம்மந்தப்பட்ட அமைப்பினர் மாவட்ட நிர்வாகம், ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக புகார் எழுப்பி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆலை நிர்வாகத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் எனவும் தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    அதையடுத்து கூட்டத்தில் பங்கேற்ற மற்ற மக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டது. அந்த கருத்துக்கள் மற்றும் ஆலை நிர்வாகத்தினர் அளித்த விளக்கம் அனைத்தும் அரசுக்கு அனுப்பியபின் ஆலை விரிவாக்கம் சம்மந்தமாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai