சுடச்சுட

    

    சூளகிரி அருகே  காதலன் விஷம் அருந்தியதால் மணமகள் திருமணம் நின்றது:  ஒருதலைக் காதல்

    By  ஒசூர்,  |   Published on : 24th January 2015 09:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே திருமண மண்டபத்தில் காதலன் விஷம் அருந்தியதால், மணப்பெண்ணின் திருமணம் தடைபட்டது. மணமகனுக்கு உறவுப் பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.
     மேலும், மணப்பெண்ணை இரவோடு இரவாகக் கடத்தவந்த கும்பலில் இருவரை போலீஸார் கைது செய்தனர். மேலும் 4 பேர் தப்பியோடி விட்டனர்.
     கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள குரல்தொட்டி பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும், ஒசஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த சாதப்பா மகன் ரமேஷுக்கும் (22) வெள்ளிக்கிழமை சூளகிரியில் திருமண மண்டபத்தில் திருமணம் நடப்பதாக இருந்தது. இதற்காக திருமண மண்டபத்தில் இரு வீட்டாரின் உறவினர்களும் வந்திருந்தனர்.
     பார்த்தகோட்டா அருகே உள்ள ரமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாதேஷ் (25). இவர் மணப்பெண் வேலை செய்யும் நிறுவனத்தில் வேன் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். அப்போது அந்தப் பெண்ணைக் காதலிப்பதாக மாதேஷ் தெரிவித்தாராம். ஆனால், மாதேஷின் காதலை அந்தப் பெண் ஏற்கவில்லையாம்.
     இந்த நிலையில், அந்தப் பெண்ணுக்கு சூளகிரியில் வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெறவிருந்தது. திருமணத்துக்கு வருமாறு மாதேஷுக்கு அந்தப் பெண் அழைப்பு விடுத்தாராம்.
     இதையடுத்து, வியாழக்கிழமை இரவு மாதேஷ் தனது நண்பர்கள் 6 பேருடன், திருமண மண்டபத்துக்கு வந்தார். அவர்கள் மணமகளைக் கடத்திச் செல்லும் திட்டத்துடன், உருட்டுக்கட்டை, மிளகாய்ப் பொடி, இரும்புக் கம்பி ஆகிய ஆயுதங்களுடன் வந்திருந்தனராம்.
     நள்ளிரவில் மாதேஷின் நண்பர்கள் சந்தேகத்திற்கிடமாக மணப்பெண் அறை உள்ள பகுதியில் நடமாடினராம். இதை மணமகன் ரமேஷ் பார்த்து, தனது பெற்றோர், உறவினர்களிடம் தெரிவித்தாராம். இதையடுத்து, அவர்கள் மாதேஷின் நண்பர்களைப் பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர்கள் அனைவரும் ஆயுதங்களுடன் மணப்பெண்ணைக் கடத்திச் செல்ல வந்திருந்தது தெரிய வந்தது. அவர்களில் முருகேசன் (22), குமார் (24) ஆகிய 2 பேரைப் பிடித்து சூளகிரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 4 பேர் தப்பியோடி விட்டனர்.
     இதனிடையே, வெள்ளிக்கிழமை திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. அப்போது திடீரென மணமேடைக்கு வந்த மாதேஷ், தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால், விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்வதாக மணப்பெண்ணை மிரட்டினார். ஆனால், மணப்பெண் மறுக்கவே, பாட்டிலில் மறைத்து வைத்திருந்த விஷத்தை எடுத்து மாதேஷ் குடித்து விட்டு மயங்கி விழுந்தார்.
     திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் அவரை மீட்டு, சூளகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அவர் தீவிர சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
     இந்த நிகழ்வுகளைப் பார்த்த மணமகன் ரமேஷின் பெற்றோர் திருமணத்தை நிறுத்தினர். அந்த மண்டபத்திலேயே, மாதரசனப்பள்ளி பகுதியைச் சேர்ந்த உறவுப் பெண் திவ்யாவை ரமேஷுக்கு திருமணம் செய்து வைத்தனர். இதையடுத்து, மணப்பெண்ணை அவரது பெற்றோர் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai