சுடச்சுட

    

    "மாணவர்கள் பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்'

    By  நாமக்கல்,  |   Published on : 24th January 2015 09:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பள்ளிப் பருவத்திலேயே மாணவர்கள் பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி.
     நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அரசு மகளிர் கலைக் கல்லூரி கலையரங்கில் தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
     மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி, புத்தகக் கண்காட்சியைத் திறந்து வைத்து பார்வையிட்டதோடு, தொழில் நெறி வழிகாட்டும் கருத்தரங்கைத் தொடக்கி வைத்துப் பேசியது:
     தமிழகத்தின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களைப் பெரும்பாலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ரயில்வே தேர்வுகள், வங்கிப்பணி தேர்வுகள், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வாணையம் உள்பட பல்வேறு தேர்வாணையங்கள் மூலமாக போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு பணியில் அமர்த்தப்படுகின்றனர்.
     இன்றைய சூழலில் உயர்கல்வி படிக்கும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் தாங்கள் தேர்வு செய்து படிக்கின்ற பாடத்திற்கு ஏற்ப பணிகள் கிடைப்பதில்லை. எனவே மாணவ, மாணவிகள் பள்ளிப் பருவத்திலேயே மாவட்ட, மாநில, தேசிய மற்றும் உலக அளவிலான பொது அறிவுப் பாடங்களைப் படித்து மனதில் பதிய வைக்க வேண்டும்.
     நாமக்கல் மாவட்ட மைய நூலக வளாகத்தில் வேலை வாய்ப்புத்துறையின் மூலம் மாணவ, மாணவியர்களுக்கு தொகுதி 1 உள்பட பல்வேறு போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்வதற்கான பயிற்சி வகுப்புகள் அனுபவம் மிக்க ஆசிரியர்களால் நடத்தப்பட்டு வருகின்றன.
     நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்புத்துறை தனியார் துறையுடன் இணைந்து நடத்திய வேலைவாய்ப்பு முகாம் மூலமாக 1000-க்கும் மேற்பட்டோர் பல்வேறு நிறுவனங்களில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
     தமிழகத்தில் 95 சதவீத அரசுப் பணியாளர்கள் போட்டித் தேர்வுகள் மூலமாகவே பணியமர்த்தப்படுகின்றனர். மாணவ, மாணவியர்கள் சிறு வயதிலேயே தாங்கள் படிக்கின்ற பாடத்தோடு பொது அறிவுப் பாடங்களையும் கற்றுக் கொள்வதோடு அறிவு சார்ந்த புத்தகங்களை நூலகங்களுக்குச் சென்று படிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
     மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளில் பங்கேற்று முதல் 3 இடங்களைப் பெற்ற கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு ஆட்சியர் பரிசு வழங்கினார்.
     மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ம.மகேஸ்வரி வரவேற்றார். நாமக்கல் கல்லூரி முதல்வர் ஜெயந்தி வைலட், வேலைவாய்ப்புத்துறை கோவை மண்டல இணை இயக்குநர் ஆ.லதா, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஆர்.பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     
     
     
     
     
     
     
     
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai