Enable Javscript for better performance
\\\"மாதிரி கிராமம் திட்டம் வெற்றிக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்\\\'- Dinamani

சுடச்சுட

    

    "மாதிரி கிராமம் திட்டம் வெற்றிக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்'

    By நாமக்கல்,  |   Published on : 26th January 2015 03:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாதிரி கிராமம் திட்டம் வெற்றியடையை மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.

    நாமக்கல் தொகுதி மக்களவை உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம், மாதிரி கிராம திட்டத்தின் கீழ், கொல்லிமலை வட்டம், திண்ணனூர்நாடு ஊராட்சியைத் தேர்வு செய்தார்.

    இந்த நிலையில், அந்த ஊராட்சியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கான சிறப்பு மனு நீதி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் வி.தட்சணாமூர்த்தி, நாமக்கல் தொகுதி மக்களவை உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் ஆகியோர் திண்ணனூர்நாடு ஊராட்சி மன்றத்திற்கு உள்பட்ட கிராம மக்களின் கோரிக்கைகளை கேட்டு அறிந்ததுடன், அவர்களிடமிருந்து மனுக்களைப் பெற்று, துறை சார்ந்த அலுவலர்களிடம் அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினர்.

    இதில் மக்களவை உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் பேசியது:

    மாதிரி கிராம திட்டத்தின் கீழ், மலைப் பகுதியான திண்ணனூர்நாடு ஊராட்சிக்கு வரும் ஓர் ஆண்டில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்துகொடுக்கப்படும். மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் திண்ணனூர்நாடு ஊராட்சி, அக்கரைவளவுபட்டியில் ரூ.8 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையம் அமைக்கவும், வாசலூர்பட்டி, பெரியசோளக்கன்னிபட்டி பகுதிகளில் தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.6 லட்சத்தில் கதிரடிக்கும் களம் என மொத்தம் ரூ.14 லட்சத்தில் பணிகளைத் தொடங்க நிதியை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ளேன். தொடர்ந்து, இந்தக் கிராமத்திற்கு பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்து தருவேன் என்றார்.

    முகாமில் மாவட்ட ஆட்சியர் பேசியது: திண்ணனூர்நாடு ஊராட்சியில் மட்டும் இதுவரை ரூ.8 கோடியில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக பசுமை வீடு திட்டம், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ், சுமார் 190 புதிய வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. "தாய்' திட்டத்தின் கீழ். ரூ.40 லட்சத்தில் புதிய தார்ச் சாலை, சிமென்ட் சாலை, மயான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்தக் கிராமத்துக்கான தேவைகள் குறித்து அறிய, துறை அலுவலர்கள் ஆய்வு செய்ய வரும்போது உண்மை நிலையை விளக்கி கூறி, இந்தக் கிராமத்தை முன்மாதிரி கிராமமாக உருவாக்க மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

    முன்னதாக, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சி.மாலதி வரவேற்றார். நாமக்கல் வருவாய்க் கோட்டாட்சியர் கே.காளிமுத்து, கொல்லிமலை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சி.சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai