Enable Javscript for better performance
14,677 பேருக்கு விலையில்லா ஆடுகள் அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 14,677 பேர் பயனடைந்துள்ளதாக, தொழில் துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.

    நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே, புதுப்பாளையம், அக்ரஹாரம் ஊராட்சியில் அரசின் விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா, மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.செல்வக்குமார சின்னையன், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் எஸ்.செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில், தொழில் துறை அமைச்சர் பி.தங்கமணி 107 பயனாளிகளுக்கு ரூ.13,69,600 லட்சம் மதிப்பில் தலா 4 ஆடுகள் வீதம் 428 விலையில்லா ஆடுகளையும், விலையில்லா ஆடுகளைப் பெற்ற 107 பயனாளிகளுக்கு ஆதாரச் செலவினத் தொகையாக தலா ரூ.2,000 வீதம் ரூ.2,14,000 மதிப்பில் காசோலைகளையும் வழங்கிப் பேசியது:

    ஏழை, எளிய மக்கள் ஏற்றம் பெற வேண்டும் என்பதற்காகவும், இல்லாமை இல்லாத நிலையை தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என்பதற்காவும் எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களைத் தந்தவர் ஜெயலலிதா. தமிழகம் தவிர வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்றத் திட்டங்கள் இல்லை.

    கிராமப்புறங்களில் உள்ள மகளிர் குறிப்பாக ஏழ்மையிலும் ஏழ்மையானவர்கள், பொருளாதார வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக விலையில்லா ஆடுகள், கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா அறிவித்தார்.

    அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 400 மகளிருக்கு விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கப்பட்டு, அவை 556 கன்றுகளை ஈன்றுள்ளன. அதேபோல, 14,677 பயனாளிகளுக்கு தலா 4 ஆடுகள் வீதம், 58,708 ஆடுகள் வழங்கப்பட்டு, அவைகள் இதுவரை 74,455 குட்டிகளை ஈன்றுள்ளன. இதனால், கிராமப்புறங்களிலுள்ள ஏழை எளியவர்களின் பொருளாதாரம் மேம்பட்டு, வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது.

    மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களைத் தந்தவர் ஜெயலலிதா. அவர் அறிவித்த அனைத்துத் திட்டங்களையும் பொதுமக்கள் முழுமையாகப் பெற்று பயன்படுத்திக்கொண்டு தங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார்.

    முன்னதாக, கால்நடைப் பராமரிப்புத் துறையின் மண்டல இணை இயக்குநர் ப.சக்திவேல் வரவேற்றார். எப்.சி.சி.எஸ்.தலைவர் பி.ஆறுமுகம், பள்ளி பாளையம் நகர்மன்றத் தலைவர் எஸ்.வெள்ளியங்கிரி, துணைத் தலைவர் டி.கே.சுப்பிரமணியம், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் பி.சுந்தரம், கே.ராஜு, பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் எஸ்.சண்முகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிட்டிபாபு, கந்தசாமி, புதுப்பாளையம் அக்ரஹாரம் ஊராட்சித் தலைவர் பி.எஸ்.ரவி, துணைத் தலைவர் துரை.சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai