சுடச்சுட

    

    ஹோட்டல் உரிமையாளரிடம் போலீஸார் விசாரணை

    By பரமத்தி வேலூர்  |   Published on : 27th January 2015 04:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்தி வேலூர் வட்டம், எஸ்.வாழவந்தி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு பூட்டியிருந்த கடைக்குள் இருந்து மர்மப் பொருள் வெடித்ததில் கடைக்கு வெளியே அமர்ந்திருந்த 3 பேர் பலியான சம்பவம் குறித்து, ஹோட்டல் உரிமையாளரிடம் பரமத்தி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நிகழ்விடத்தை மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் திங்கள்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், எஸ்.வாழவந்தி அருகே, கே.புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் ராமசந்திரன். இவர் காலமாகிவிட்டார். இவரது மனைவி வெண்ணிலா. இவருக்குச் சொந்தமான இடத்தில், திருச்சி மாவட்டம், துறையூரைச் சேர்ந்த சக்ரபாணி என்பவர் ஹோட்டல் நடத்தி வந்தார். இவர் ஞாயிற்றுக்கிழமை மாலை கடையைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றார்.

    இந்தக் கடைக்கு வெளியில் இருந்த இருக்கையில் அமர்ந்து வள்ளியப்பம்பட்டிபுதூரைச் சேர்ந்த பெரியண்ணன் (70), கருப்பண்ணன் (50), காளப்பநாயக்கன்பட்டி அருகே உத்திரகிரிகாடைச் சேர்ந்த குப்புசாமி (58) ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி அளவில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, பூட்டியிருந்த ஹோட்டலின் உள்ளே இருந்து பயங்கர சத்தத்துடன் பொருள்கள் வெடித்துச் சிதறின. இதில் வெளியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த 3 பேரும் தலை சிதறி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், கடை முழுவதுமாகச் சேதமடைந்தது.

    கடையின் பின்புறம் உள்ள வீட்டில் வசிக்கும் வெண்ணிலா வெடி சத்ததத்தில் மயக்கமடைந்தார். அவர் நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், அவரது வீட்டின் கண்ணாடிகளும் உடைந்து சேதமடைந்தன.

    உடனடியாக அங்கு வந்த தீயணைப்புத் துறையினர், போலீஸார் உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

    இதுகுறித்து ஹோட்டல் உரிமையாளர் சக்ரபாணியிடம் பரமத்தி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதில், சக்ரபாணி ஓர் எரிவாயு உருளையில் இருந்து மற்றொரு எரிவாயு உருளைக்கு எரிவாயுவை மாற்றித் தருவது தெரியவந்தது. தொடர்ந்து, அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, திங்கள்கிழமை காலை மாவட்ட ஆட்சியர் தட்சிணாமூர்த்தி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். மேலும், சேலம் தடய அறிவியல் நிபுணர் செந்தில்குமார், போலீஸார் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai