சுடச்சுட

    

    நாமக்கல்லை சிறார் தொழிலாளர் இல்லாத மாவட்டமாக மாற்ற முயற்சி

    By நாமக்கல்  |   Published on : 29th January 2015 04:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் மாவட்டத்தை சிறார் தொழிலாளர் இல்லாத மாவட்டமாக மாற்ற முயற்சி மேற்கொண்டுவருவதாக, ஆட்சியர் தெரிவித்தார்.

    தொழிலாளர் ஆணையர் பெ. அமுதா உத்தரவின்பேரில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி ஆலோசனையின்படி, சிறார் தொழிலாளர் ஒழிப்பு முறையைத் தீவிரமாக அமல்படுத்த, தொடர் ஆய்வுகள் மேற்கொண்டு, 14 வயதுக்கு குறைவான சிறார்களை பணியில் அமர்த்தும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

    இதன் அடிப்படையில், ஜனவரி மாதத்தில் நாமக்கல் நகரத்தில் உள்ள பல்வேறு வகையான 40 நிறுவனங்களில் நாமக்கல் மாவட்டத் தொழிலாளர் ஆய்வாளர் சி.மஞ்சள்நாதன் தலைமையில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனையின் போது பரமத்தி சாலையில் டீ கடையில் 14 வயதுக்கு குறைவான வட மாநிலத்தைச் சேர்ந்த சிறுவன் பணி செய்து கொண்டிருந்தது கண்டுபிடுக்கப்பட்டது.

    அந்தச் சிறுவனை ஆட்சியர் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அந்தச் சிறுவனை சொந்த ஊருக்கு அனுப்பி, கல்வி பயில்வதற்கான உதவிகளை செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

    மேலும், நாமக்கல் மாவட்டத்தை சிறார் தொழிலாளர் இல்லாத மாவட்டமாக மாற்ற, செயல் திட்டத்தை வகுத்து, அதன்படி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனத் தொழிலாளர் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

    இதனால், கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், இரு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் நிறுவனங்கள், லாரிக் கூண்டு கட்டும் நிறுவனங்கள் போன்ற நிறுவனங்களின் உரிமையாளர்கள் 14 வயதுக்கு குறைவான சிறார்களை பணிக்கு அமர்த்த வேண்டாம் எனவும், அரசு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும், இதை மீறும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ஆட்சியர் எச்சரித்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai