சுடச்சுட

  

  உலக சாதனைக்காக 4000 அடி உயரத்தில் பறக்க முயற்சி

  By குமாரபாளையம்  |   Published on : 30th January 2015 03:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே, வியாழக்கிழமை பவர் பேரா மோட்டாரின் உதவியுடன் தொடர்ந்து 8 மணி நேரம் பறக்கும் முயற்சியை மேற்கொண்டார் வி.மேட்டூர் கிராம இளைஞர்.

  குமாரபாளையத்தை அடுத்த வி.மேட்டூரைச் சேர்ந்தவர் எஸ்.கதிரேசன் (24) . பெங்களூருவில் எம்.டெக்., ஏரோ ஸ்பேஸ் கல்வி பயின்ற இவர் கடந்த 2 ஆண்டுகளாக

  சேலம் விமான நிலையத்தில் கமர்சியல் பைலட்டாகப் பயிற்சி பெற்று வருகிறார்.

  இவர், பவர் பேரா மோட்டார் இயந்திரத்தின் மூலம் வானத்தில் 8000 அடி வரையில் பறப்பதற்கு உரிய அனுமதி பெற்றுள்ளார்.

  வானத்தில் தொடர்ந்து 8 மணி நேரம் பறந்து உலக சாதனை

  படைக்க கதிரேசன் முயற்சி செய்தார். கடந்த சில நாள்களாகப் பறக்க முயன்றும் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால், அவருடைய முயற்சி தோல்வியில் முடிந்தது.

  இந்நிலையில், வியாழக்கிழமை இரவு வானத்தில் பறக்க அவர் முயற்சி மேற்கொண்டார்.

  தரையிலிருந்து புறப்பட்டு, நிமிடத்துக்கு 1,500 அடி உயரம் என்ற வகையில் பறந்த கதிரேசன், சுமார் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் அடி உயரத்தில் தொடர்ந்து பறந்தார்.

  ஊராட்சிக்கோட்டை மலை, பெருமாள் மலை, சங்ககிரியை அடுத்த கஞ்சமலை, திருச்செங்கோடு மலைகளை எல்லைகளாகக் கொண்டு பறந்த கதிரேசன், எரிபொருள் மாற்றும்போது மோட்டாரில் ஏற்பட்ட கோளாறால் ஒன்றரை மணி நேரத்துக்குப் பின்னர் தரையிறங்கினார்.

  இதுகுறித்து கதிரேசன் கூறுகையில், வெளிநாட்டைச் சேர்ந்த நிப்பான் என்பவர் 4 மணி 30 நிமிடங்கள் தொடர்ந்து வானத்தில் பறந்து சாதனை படைத்துள்ளார். இந்தச் சாதனையை முறியடிக்கும் வகையில் தொடர்ந்து 8 மணி நேரம் பறக்க முயற்சி மேற்கொண்டு, கடந்த ஆறு மாதங்களாகக் கடுமையாகப் பயிற்சி செய்து வருகிறேன்.

  எரிபொருள் மாற்றும்பொழுது ஏற்பட்ட பழுதால் ஒரு மணி நேரம் 30 நிமிடங்களில் தரையிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுபோன்று பறக்க உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் தயாராக இருந்தால் போதும்.

  இப்போது ஏற்பட்ட இடையூறைக் கடந்து, மீண்டும் பறந்து உலக சாதனையை எட்ட, முயற்சியைத் தொடருவேன் என்றார் கதிரேசன். இந்த உலக சாதனை முயற்சிக்கு, பொதுமக்கள் திரண்டு வாழ்த்துத் தெரிவித்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai