மயானப் பாதையை மீட்கக் கோரி ஆர்ப்பாட்டம்
By நாமக்கல், | Published on : 30th January 2015 04:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
மயானப் பாதையை மீட்டுத்தரக் கோரி, நாமக்கல் அண்ணா சிலை முன் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே பொட்டணம் புதூர் பகுதியில், 300-க்கும் மேற்பட்ட அருந்ததியர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 150 ஆண்டுகளாக மயானத்திற்குச் சென்று வந்த பாதையை மறித்து, ஒருவர் வேலி அமைத்துள்ளார். இந்நிலையில், கடந்த வாரம் அப்பகுதியில் உள்ள மூதாட்டி ஒருவர் இறந்ததால், வழக்கமாகப் பயன்படுத்தும் பாதையை மீட்டுத் தர வலியுறுத்தி, இறந்தவரின் உடலை சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதனால், வருவாய் மற்றும் காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இறந்த மூதாட்டியின் உடலை, அரசுத் துறையினர் மயானத்திற்கு எடுத்துச்சென்றனர்.
இதனால், வருவாய் மற்றும் காவல் துறையினரின் செயல்பாடுகளைக் கண்டித்தும், மயானப் பாதையை மீட்டுத் தரக் கோரியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் எம்.அசோகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.