வெப்படை தனியார் நூற்பாலையில் 11 சிறார் தொழிலாளர்கள் மீட்பு
By நாமக்கல், | Published on : 30th January 2015 03:47 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
நாமக்கல் மாவட்டம், வெப்படை தனியார் நூற்பாலையில், பணியில் ஈடுபடுத்தப்பட்ட வெளி மாநிலக்
சிறார்கள் 6 பேர் உள்பட மொத்தம் 11 சிறார் தொழிலாளர்களை, தொழிலாளர் நலத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை மீட்டனர்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியில் உள்ள நூற்பாலைகளில் சிறார் தொழிலாளர்களை, பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்திக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, தொழிலாளர் ஆணையர் பெ.அமுதா உத்தரவின்பேரில், தொழிலாளர் நலத் துறை அதிகாரிகள் வெப்படையிலிருந்து சங்ககிரி செல்லும் சாலையில் உள்ள நூற்பாலையில் ஆய்வு செய்தனர்.
அப்போது, அங்கு பணியில் இருந்த 11 சிறார்களை அதிகாரிகள் மீட்டனர்.
இதில், 3 பேர் பெண் சிறார்கள், இவர்கள் அனைவரும் ஓடிஸா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
மேலும், 8 ஆண் சிறார்களில் 3 பேர் பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
மீட்கப்பட்ட அனைவரும், ஆட்சியர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களை, சொந்த ஊருக்கு அனுப்பிவைத்து, கல்வி பயில்வதற்கான உதவிகளைச் செய்யுமாறு ஆட்சியர் உத்தரவிட்டார்.
மேலும், நாமக்கல் மாவட்டத்தை, சிறார் தொழிலாளர் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் கண்காணிப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனால், தொழில் நிறுவனங்களில் 14 வயதுக்கும் குறைவான சிறார்களைப் பணிக்கு அமர்த்த வேண்டாம் எனவும், அரசு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்புத் தர வேண்டும் எனவும், அவ்வாறு மீறும் நிறுவனங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
இந்த ஆய்வில், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநர் ச.அனிதா ரோசலின் மேரி, தேசியக் குழந்தைத் தொழிலாளர் திட்ட இயக்குநர் அ.போ.அந்தோணி ஜெனிட், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகப் பணியாளர்கள் உமா மகேஸ்வரி, விஜயலட்சுமி மற்றும் சைல்டுலைன் களப் பணியாளர்கள் பங்கேற்றனர்.
பறிபோகும் ஏற்றுமதி வாய்ப்பு: சிறார் தொழிலாளர்களைப் பணியில் ஈடுபடுத்திய நிறுவனம், சீன நாட்டுக்குத் துணிகளை ஏற்றுமதி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஏற்றுமதி சட்ட விதிகளின் படி, சிறார் தொழிலாளர்களைப் பணியில் ஈடுபடுத்தக் கூடாது.
ஆனால், இந்த நூற்பாலை சிறார் தொழிலாளர்களைப் பணியில் ஈடுபடுத்தியதால், இந் நிறுவனம் தயாரிக்கும் துணி ரகங்களை எந்த நாட்டுக்கும் ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என தொழிலாளர் நலத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.