சுடச்சுட

    

    கேஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் தொடக்கம்

    By நாமக்கல்,  |   Published on : 31st January 2015 04:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    எண்ணெய் நிறுவனங்களுடன் வாடகை ஒப்பந்தம் செய்வது தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வெள்ளிக்கிழமை (ஜன.30) இரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.

    தென்மண்டல கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

    இந்தச் சங்கத்தின் கீழ் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி என 5 மாநிலங்களில் டேங்கர் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த லாரிகள், மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படுகின்றன.

    எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து உருளையில் எரிவாயு நிரப்பும் மையங்களுக்கு (பாட்லிங் பிளாண்ட்) ஒப்பந்த அடிப்படையில் இவை இயக்கப்படுகின்றன. இதற்கான ஒப்பந்த காலம் கடந்த அக்டோபர் 31ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

    இதையடுத்து, இ-டெண்டர் முறையில் புதிய ஒப்பந்தப்புள்ளியை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன. அதில் எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்துள்ள வாடகை, டேங்கர் லாரி உரிமையாளர்கள் கேட்கும் வாடகைக்கு இடையே பெரிய அளவில் வேறுபாடு இருப்பதாகக் கூறப்படுகிறது.

    இதுகுறித்து, கடந்த நவம்பர் மாதம் நடந்த பேச்சுவார்த்தையில், முடிவு ஏற்படாத நிலையில், டிசம்பர் 1 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை லாரி உரிமையாளர்கள் தொடங்கினர்.

    மத்திய, மாநில அரசு அதிகாரிகளின் தலையீட்டால் 3 நாள்களில் போராட்டம் முடிவுக்கு வந்தது.

    இதன்பிறகு, வாடகை ஒப்பந்தத்தை இறுதி செய்ய, சென்னையில் எண்ணெய் நிறுவன அதிகாரிகள், தென்மண்டல கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் வெள்ளிக்கிழமை (ஜன.30) பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில், லாரி உரிமையாளர்கள் கேட்ட வாடகையை தர எண்ணெய் நிறுவனங்கள் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர வெள்ளிக்கிழமை இரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

    இதுகுறித்து தென்மண்டல கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பி.நடராஜன் கூறியது:

    5 மாநிலங்களில் 3,200 சமையல் எரிவாயு டேங்கர் லாரிகள் இயக்கப்படுகின்றன. பழைய வாடகை ஒப்பந்தம் கடந்த அக்டோபர் மாதம் முடிந்த நிலையில், கடந்த 3 மாதங்களாக பழைய ஒப்பந்தத்திலேயே லாரிகளை இயக்கியதால், கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    எண்ணெய் நிறுவனங்களுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், எந்தப் பலனும் ஏற்படாத நிலையில், வேறு வழியின்றி போராட்டத்தைத் தொடங்கியுள்ளோம் என்றார்.

    இதனால், கொச்சி, தூத்துக்குடி, மங்களூர், சென்னை மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய 5 மையங்களில் உள்ள 43 சமையல் எரிவாயு நிரப்பும் நிலையங்களில் பணிகள் பாதிக்கப்படும்.

    இந்தப் போராட்டத்தால், லாரி உரிமையாளர்களுக்கு தினமும் ரூ.2 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிப்படையும்.

    போராட்டம் நீடிக்கும் பட்சத்தில் சமையல் எரிவாயு உருளைகள் தட்டுப்பாடு ஏற்படும் என லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai