Enable Javscript for better performance
விதிமீறும் சாயப்பட்டறைகள்: வெளியேற்றும் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு - Dinamani

சுடச்சுட

    

    விதிமீறும் சாயப்பட்டறைகள்: வெளியேற்றும் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு

    By குமாரபாளையம்  |   Published on : 31st January 2015 04:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில் விதிகளை மீறி, சாயப்பட்டறைகள் வெளியேற்றும் கழிவுகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதோடு, சுற்றுச்சூழல் மாசடைந்து வருவதாக நகர்மன்றக் கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

    குமாரபாளையம் நகர்மன்றக் கூட்டம், தலைவர் சிவசக்தி கே.தனசேகரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆணையர் என்.சங்கரன், துணைத் தலைவர் கேஎஸ்எம்.பாலசுப்பிரமணி முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்திய கோரிக்கைகள்:

    எஸ்.கோபாலகிருஷ்ணன்: 3-வது வார்டு பகுதிகளில், சாக்கடைகள் சுத்தம் செய்யப்படுவதில்லை. நகராட்சிப் பூங்காவில் இதுவரை இலவசமாக பயன்படுத்தப்பட்டு வந்த ஊஞ்சல்கள் அகற்றப்பட்டு, தற்போது கட்டணம் வசூலிக்கும் வகையில் புதிதாக ராட்டினங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை முறைப்படுத்த வேண்டும்.

    ஜி.பி.ரூபாராணி: 26-வது வார்டு ராஜ வீதியில், மேடான பகுதிகளுக்கு போதிய குடிநீர் வருவதில்லை. பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. நகரில் அதிகளவில் கொசுத்தொல்லை இருந்தும், கொசுமருந்து அடிப்பதில்லை.

    துணைத் தலைவர் கேஎஸ்எம்.பாலசுப்பிரமணி: நகரில் கேபிள் அமைக்கத் தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாததால், பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    என்.எஸ்.சரவணன்: 16-வது வார்டில் கழிப்பறை, நூலகக் கட்டுமானப் பணிகள் பாதியில் நிற்கிறது. நாராயண நகர் பகுதியில், இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை அகலப்படுத்த வேண்டும்.

    சி.சுகுணா: 29-வது வார்டு பிள்ளையார் கோயில் வீதி, சித்தி விநாயகர் மண்டபம் சாலைகள் பழுதடைந்து காணப்படுகிறது. இதனை பழுதுபார்க்க வேண்டும்.

    கே.ஆர்.சிவசுப்பிரமணியம்: கெளரி திரையரங்கு அருகே தேசிய நெடுஞ்சாலையுடன் இணையும் சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு, பொதுமக்கள் உயிரிழந்து வருகின்றனர். இதுகுறித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    எம்.மாதேஷ்: விதிகளை மீறி இயங்கும் சாயப்பட்டறைகள் வெளியேற்றும் சுத்திகரிக்கப்படாத கழிவுகள், 24 மணி நேரமும் சாக்கடையில் வெளியேறிச் செல்கிறது. இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு பொதுமக்களுக்கு கண் எரிச்சல், சுவாசக் கோளாறு, வாயில் புண் ஏற்படுகிறது. இதனைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai