சுடச்சுட

  

  பயிர்களை வறட்சியிலிருந்து பாதுகாக்க புதிய தொழில்நுட்பம்

  By DIN  |   Published on : 02nd December 2016 02:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாமக்கல் மாவட்டத்தில் பயறு வகைகள், பயிர்களைப் பாதுகாத்து நல்ல மகசூல் பெற மேற்கொள்ள வேண்டிய தொழில்நுட்பம் குறித்து நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ஆர்.கலியராஜ் விளக்கமளித்துள்ளார்.
  அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
  பயறு வகை பயிர்களுக்கு மற்ற பயிர்களை விட விளைச்சல் காலம் மிகக் குறைவாகும். இந்தப் பயறுகளை வறட்சியிலிருந்து காப்பாற்ற, உயிர் உரங்கள் மூலம் விதை நேர்த்தி செய்து விதைத்தல், நுண்சத்துகள் தெளித்தல், நுண்ணீர் பாசனம் மூலம் நீர் பயன்பாடு, மழை கிடைக்கப்பட்டவுடன் தழைச்சத்து உரத்தைப் பிரித்து இடுதல் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது அனைவருக்கும் தெரிந்தது.
  ஆனால், தற்போது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் நுண்ணுயிரியியல் துறையின் மூலம் மெத்தைலோட்ரோபிக் பாக்டீரியா என்ற நுண்ணுயிரி பாக்டீரியா வகையானது வெளியிடப்பட்டுள்ளது. அந்த நுண்ணுயிரின் பெயர் பிபிஎப்எம். ஆகும்.
  காற்று வாழ் உயிரியான இது, எளிதாக ஒரு மெத்தனால் சார்ந்த கனிம ஊடகத்தைச் சார்ந்து வாழக்கூடிய தன்மை வாய்ந்ததாகும்.
  இது பயிர்களுக்கு பயிர் வளர்ச்சி ஊக்கிகளான சைட்டோகைனின் மற்றும் ஆக்ஸின்களை அளிக்கிறது. இந்த பிபிஎப்எம். பாக்டீரியாவானது, அனைத்துப் பயிர்கள், மரங்கள், பூச்செடிகளுக்கு ஒரு சதவீதம் (1 லிட்டர் நீரில் 10 மில்லி லிட்டர்) முதல் 2 சதவீதம் (1 லிட்டர் நீரில் 20 மில்லி லிட்டர்) வரை திரவ நுண்ணுயிர் உரம் பரிந்துரைக்கப்படுகிறது.
  இந்த பிபிஎப்எம்., பாக்டீரியாவை விதை நேர்த்தியாகவோ அல்லது இலைவழி மூலமாகவோ பயன்படுத்தலாம். இலைவழி தெளிக்கும்போது இலைகள் நன்கு நனையும்படி தெளிப்பது அவசியம். பயிர்களின் முக்கிய வளர்ச்சிக் காலங்கள், பூ மற்றும் காய் பிடிக்கும் தருணங்களில் இதைத் தெளிக்க வேண்டும்.
  இந்த பிபிஎப்எம்., பாக்டீரியாவை பயன்படுத்துவதால், விதை முளைப்புத் திறன் அதிகரித்து, நாற்றுகளின் வளர்ச்சியை மேம்படுத்துகிறது. பூக்கும் காலம், காய்களின் அறுவடை காலத்தைக் குறைக்கிறது.
  அதுமட்டுமின்றி பழங்கள், காய்கள், விதைகளின் நிறம், தரம் அதிகரித்து மகசூல் 10 சதம் அதிகரிக்கிறது. மேலும் வறட்சியைத் தாங்கும் திறனைப் பயறுகளுக்கு அளிக்கிறது. இதனை ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளுடன் கலந்து தெளிக்கக் கூடாது.
  பயிர் வகை பயிர்களுக்கு 2 சதம் பொட்டாசியம் குளோரைடு உடன் 100 பிபிஎம் போரான் கலந்து தெளிக்க வேண்டும். எண்ணைய் வித்து பயிர்களுக்கு 1 சதம் பொட்டாசியம் குளோரைடு உடன் 2 சதம் டிஏபி கலந்து தெளிக்க வேண்டும். மற்ற அனைத்து பயிர்களுக்கு 3 சதம் கயோலின் தெளித்து வறட்சியில் உள்ள பயிர்களைப் பாதுகாக்கலாம்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai