சுடச்சுட

  

  குடிநீர்ப் பிரச்னையால் பரிதவிக்கும் கிராமப்புற மக்கள்: துரித நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 03rd December 2016 07:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாமக்கல் மாவட்டத்தில் பருவமழை பொய்த்ததால், கிராமப்புறங்களில் கடுமையாகிவரும் குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
    நாமக்கல் மாவட்டத்தைப் பொருத்தமட்டில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்குப் பெய்யவில்லை. வடகிழக்குப் பருவமழையும் பொய்த்துவிட்டது. இந்த மாவட்டத்தில் நகர் மற்றும் கிராமப் பகுதிகள் குடிநீர்த் தேவைக்கு நிலத்தடி நீர் ஆதாரத்தையே நம்பியுள்ளன.
    நகர்ப் பகுதிகளில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் ஓரளவு குடிநீர் கிடைத்தாலும், அனைத்து நகரங்களிலுமே குறைந்தபட்சம் 5 நாட்களில் இருந்து 10 நாட்கள் இடைவெளியில்தான் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
   நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322  ஊராட்சிகளில் சுமார் 75 சதவீதம் ஊராட்சிகளுக்கு குடிநீர் விநியோகம் நிலத்தடி நீர் ஆதாரம் மூலமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    15 ஊராட்சி ஒன்றியங்களில் 7 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராம ஊராட்சிகளுக்கு மட்டும் 70 சத ஊராட்சிகளுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. எஞ்சிய 8 ஊராட்சி ஒன்றியங்களில் முழுமையாக நிலத்தடி நீர்தான் குடிநீர் ஆதாரமாக உள்ளது.
    பல கிராமங்களில் நிலத்தடி நீர் வற்றி விட்டதால், குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. மேலும் குழாய் உடைப்பு, மின் மோட்டார் பழுது காரணமாக குடிநீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
   கிராம ஊராட்சிகள் தனி அதிகாரிகள் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், இப் பிரச்னைக்கு தீர்வு காண யாரிடம் முறையிடுவது என்று தெரியாமலே கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.  குடிநீர் விநியோகம் செய்ய முடியாததற்கு கிராம ஊராட்சிகளில் நிதிப் பற்றாக்குறை காரணமாக,  மின் மோட்டார் பழுது மற்றும் குழாய் உடைப்புகளைச் சரிசெய்ய முடியவில்லை என்ற காரணமே கூறப்படுகிறது. இதனால் கிராமப்புறங்களில் குடிநீர்ப் பிரச்னை கடுமையாகி வருகிறது.
    இதனால் வாரம்தோறும் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் நிகழ்வில் கிராமப் புறங்களில் உள்ள பெண்கள் குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்கக் கோரி காலிக் குடங்களுடன் வந்து முற்றுகைப் போராட்டம் நடத்துவது தொடர்கிறது.
   குறிப்பாக, ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதியில் குடிநீர்ப் பிரச்னை அதிகம் உள்ளதாக அப் பகுதி மக்கள் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகம் வந்து மனுக்கள் அளித்தாலும், பிரச்னைக்குத் தீர்வு காணப்படுவதில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினாலும் அதிகாரிகள் பாராமுகமாகவே உள்ளனர்.
   எனவே, மாவட்டம் முழுவதும் நிலவிவரும் குடிநீர்ப் பிரச்னைக்குத் தீர்வு காண மாவட்ட நிர்வாகம், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மூலம் குடிநீர்ப் பிரச்னை உள்ள கிராமங்களைக் கண்டறிந்து அதற்கு தீர்வு காண போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai