சுடச்சுட

  

  குமாரபாளையத்தில் கனமழையால் வாரச் சந்தையில் வியாபாரம் பாதிப்பு

  By DIN  |   Published on : 03rd December 2016 07:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குமாரபாளையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பெய்த கனமழையால் வாரச்சந்தையில் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும், சந்தை வளாகம் முழுவதும் மழையால் சேறும் சகதியுமாகக் காணப்பட்டது.
  நடா புயல் காரணமாக குமாரபாளையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பரவலாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு, அவ்வப்போது லேசான தூறலும் காணப்பட்டு வந்தது. இந் நிலையில், வெள்ளிக்கிழமை மாலை சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
  சேலம் பிரதான சாலையில் சாக்கடைகள் நிரம்பி சாலையில் வெள்ள நீர் பெருக்கெடுத்தது. வழக்கமாக குமாரபாளையம், சின்னப்பநாயக்கன்பாளையத்தில் வெள்ளிக்கிழமை கூடும் நகராட்சி வாரச் சந்தையில் வியாபாரிகள் மழையை எதிர்நோக்கி முன்னெச்சரிக்கையாக பாலித்தீன் காகிதங்களைக் கொண்டு மேற்கூரை அமைத்து கடை விரித்திருந்தனர்.
   சிறு வியாபாரிகள் மேற்கூரை அமைக்காமல் கொண்டு வந்திருந்த பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்தனர். லேசான தூறலுக்கு மத்தியில் பவானி, குமாரபாளையம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் காய்கறிகள் மற்றும் குடும்பத்துக்குத் தேவையான பொருள்களை வாங்கிட குடைகளுடன் வந்திருந்தனர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை பெய்த திடீர் கனமழையால் குமாரபாளையம் சந்தை வளாகம் மழைக்குள் சிக்கித் தவித்தது.
  சந்தை வளாகத்துக்குள் நடைபாதையெங்கும் மழைநீர் தேங்கியதால் வியாபாரிகளும், பொதுமக்களும் பெருத்த சிரமத்துக்குள்ளாகினர். வியாபாரிகள் தலைக்கு பிளாஸ்டிக் பைகளைக் கொண்டு மூடியபடியும், குடைகளைப் பிடித்தபடியும் வியாபாரத்தில் ஈடுபட்டனர். மழையால் சந்தைக்கு பொருள்கள் வாங்க வருவோரின் கூட்டமும் கணிசமாக குறைந்தே காணப்பட்டது.
  இதனால், பல வியாபாரிகள் மழை பெய்யத் தொடங்கிய சிறிது நேரத்தில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டதால், கடைகளை மூடத் தொடங்கியதோடு, வியாபாரத்தையும் முன்னதாகவே முடித்துக் கொண்டனர். பெரும்பாலும் விசைத்தறி, விவசாயக் கூலித் தொழிலாளர்கள் வாரச் சம்பளம் நாளான வெள்ளிக்கிழமை சந்தையில் பொருள்கள் வாங்குவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
  சந்தையில் வியாபாரம் மும்முரமாக நடைபெறும் மாலை நேரத்தில் பெய்த கனமழையால் வியாபாரிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கடுமையான வெயிலும், வறட்சியும் காணப்பட்டு வந்த நிலையில் பரவலாகப் பெய்த இம் மழையால் குளிருடன் கூடிய இதமான சூழல் நிலவியது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai