சுடச்சுட

  

  வாடகை நிர்ணய பதிவுச் சான்றிதழ் வழங்க ரூ.1,500 லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான, பொதுப்பணித் துறை அலுவலக முதுநிலை வரைவாளருக்கு நாமக்கல் நீதிமன்றத்தில் 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதே வழக்கில் கைதான பெண் அலுவலர் விடுதலை செய்யப்பட்டார்.
   நாமக்கல் கணேசபுரத்தைச் சேர்ந்தவர் துரைசாமி. அவரது அண்ணன் சுப்பிரமணிக்கு சொந்தமான கட்டடம் நாமக்கல்லில் உள்ளது. அந்தக் கட்டடத்தை பட்டு வளர்ச்சித் துறை அலுவலகத்துக்கு வாடகைக்கு விட சுப்பிரமணி முடிவு செய்தார். அதற்கான பணிகளை துரைசாமி முன்னின்று செய்துள்ளார். பட்டு வளர்ச்சித் துறை அலுவலகத்துக்கு வாடகைக்கு விட, பொதுப்பணித் துறை அலுவலகத்தில், கட்டட வாடகை நிர்ணய பதிவுச் சான்றிதழ் பெற வேண்டும்.
   அதற்காக நாமக்கல் பொதுப்பணித் துறை கட்டட பராமரிப்பு செயற்பொறியாளர் அலுவலகத்தை சேர்ந்த முதுநிலை வரைவாளர் நாராயணசாமி என்பவரை கடந்த 1999ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி துரைசாமி அணுகியுள்ளார். அந்த சான்றிதழ் வழங்க ஒரு மாத வாடகைத் தொகையான ரூ. 2,550 லஞ்சமாகத் தர வேண்டும் என, நாராயணசாமி நிர்பந்தம் செய்துள்ளார்.
   எனினும், அவ்வளவு தொகை தர இயலாது என துரைசாமி கூறியுள்ளார். கடைசியில் ரூ.1,500 தந்தால் மட்டுமே வாடகை நிர்ணய பதிவுச் சான்றிதழ் வழங்க முடியும் என நாராயணசாமி கூறியுள்ளார். அதற்கு துரைசாமி இசைவு தெரிவித்துள்ளார்.
   எனினும், லஞ்சம் வழங்க மனமில்லாத துரைசாமி அதுதொடர்பாக சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் புகார் செய்தார். அதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினர் அறிவுறுத்தல்படி ரூ.1,500 ஐ முதுநிலை வரைவாளரிடம், துரைசாமி வழங்கியுள்ளார். அதில் ரூ. 500, அதே அலுவலகத்தில் பணிபுரிந்த இளநிலை வரைவாளர் மனோன்மணி என்ற பெண் அலுவலருக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது.
   அப்போது அங்கு மாறு வேடத்தில் நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் நாராயணசாமி, மனோன்மணி ஆகிய இருவரையும் கையும் களவுமாகப் பிடித்தனர். அந்த வழக்கு நாமக்கல் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்ததையடுத்து, அந்த வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.
   அதன்படி, முதுநிலை வரைவாளர் நாராயணசாமிக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ. 2,000 அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத் தொகை கட்டத் தவறினால் கூடுதலாக ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி கருணாநிதி உத்தரவிட்டார். அதுபோல், அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மனோன்மணி விடுதலை செய்யப்பட்டார். சிறைத் தண்டனை பெற்ற நாராயணசாமிக்கு தற்போது 70 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai