சுடச்சுட

  

  டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு: நாமக்கல்லில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

  By நாமக்கல்,  |   Published on : 10th December 2016 09:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு தொடர்பாக நாமக்கல்லில் முகாமிட்டு சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினர்.
   திருச்செங்கோடு டிஎஸ்பியாகப் பணியாற்றிய விஷ்ணுபிரியா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி டிஎஸ்பி முகாம் அலுவலகத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
   தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் உயரதிகாரிகள் நெருக்கடி காரணமாகவே விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார் என அவரது தோழி கீழக்கரை டிஎஸ்பியாக இருந்த மகேஸ்வரி பகிரங்கமாகவே குற்றம்சாட்டியிருந்தார்.
   பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தியதைத் தொடர்ந்து, டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வந்தனர்.
   இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு முதலில் தள்ளுபடி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.
   அந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம், விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.
   இதையடுத்து, விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதில், சிபிசிஐடி விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவில் தெளிவான காரணங்கள் இல்லை என்று அந்த மனுவில் தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், கடந்த அக்டோபர் 24ஆம் தேதி இந்த வழக்கை சிபிஐ தான் விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
   இதைத்தொடர்ந்து, அண்மையில் கடலூரில் டிஎஸ்பி விஷ்ணுபிரியாவின் தந்தை ரவியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை நாமக்கல் வந்த சிபிஐ எஸ்பி ராஜபாலா, டிஎஸ்பி ரவி ஆகியோர் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரனிடம் ஆலோசனை நடத்தினர்.
   விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்த ராசிபுரம் டிஎஸ்பி ராஜீ, மாவட்ட தனிப் பிரிவு ஆய்வாளர் ராஜீ மற்றும் விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்ட போது அவரது அலுவலகத்தில் பணிபுரிந்த போலீஸாருக்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
   மேலும், அப்போது நாமக்கல் மாவட்ட எஸ்பியாக இருந்த எஸ்.ஆர்.செந்தில்குமாரிடமும் விசாரிக்கப்பட உள்ளது. சிபிஐ அதிகாரிகள் வரும் 16ஆம் தேதி வரை நாமக்கல்லில் முகாமிட்டு விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai