சுடச்சுட

  

  மணல் விற்பனையில் ஊழலைத் தடுக்க வலியுறுத்தி சென்னையில் 27-இல் ஆர்ப்பாட்டம்: மணல் லாரி உரிமையாளர் சம்மேளனம் அறிவிப்பு

  By DIN  |   Published on : 11th December 2016 03:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மணல் விற்பனை மூலம் ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வரும் 27-ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்ல.ராசாமணி சனிக்கிழமை தெரிவித்தார்.
  இதுகுறித்து அவர் நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
  தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன உறுப்பினர்களுக்குச் சொந்தமாக சுமார் 70,000 மணல் லாரிகள் உள்ளன. இந்த லாரிகள் அரசு மணல் குவாரிகளில் மணலைப் பெற்று பல்வேறு ஊர்களுக்கு எடுத்துச் செல்கின்றன.
  தமிழக முதல்வராகப் பதவி வகித்த ஜெயலலிதா கடந்த 2003-ஆம் ஆண்டு அரசு மணல் குவாரிகள் அனைத்தையும் தமிழக பொதுப் பணித் துறையே ஏற்று நடத்தும் என்று கூறினார். இதனால் இடைத்தரகர்கள் ஒழிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மணல் கிடைத்தது. இந்த நிலையில், ஒரு சில ஆண்டுகளில் அரசு குவாரிகளில் இருந்து மணலை எடுத்துவந்து குடோன்களில் இருப்பு வைத்து 2-ஆம் விற்பனை செய்ய அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் தனியாருக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டது.
  இந்த ஒப்பந்ததாரர்கள் தமிழக அரசுக்கு 2 யூனிட் மணலுக்கு ரூ.1,000 செலுத்துகின்றனர். அதே 2 யூனிட் மணலை ரூ. 4,000-மாக லாரி உரிமையாளர்ளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
  இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதுடன், பொதுமக்களுக்கு மணல் விலையும் அதிகமாகிறது.
  தினமும் சுமார் 25,000 லாரிகளில் மணல் ஏற்றினால், 6,000 லாரிகளை மட்டுமே கணக்கில் காண்பிக்கின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் மணல் விற்பனை மூலம் தமிழக அரசுக்கு ரூ.1,080 கோடி மட்டுமே வருமானம் கிடைத்துள்ளது. ஆனால், இரண்டாம் விற்பனை செய்யும் தனியாருக்கு ரூ.27 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்துள்ளது.
  இந்தப் பணத்தைப் பலரும் பங்கிட்டுக் கொண்டுள்ளனர். தமிழகத்தில் மணல் இரண்டாம் விற்பனை ஒப்பந்தம் பெரும்பாலும் சேகர் ரெட்டி சகோதரர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. அதனால், அண்மையில் வருமான வரித் துறையினர் அவர்களது வீடு, அலுவலகங்கள் மற்றும் மணல் குவாரிகளில் சோதனை நடத்துவதால், கடந்த 3 நாள்களாக மணல் விற்பனை நடைபெறவில்லை.
  பொதுமக்களுக்கு தேவையான மணல் கிடைக்கவில்லை. வங்கிகளில் பணம் எடுக்க முடியாததால், மணல் லாரி உரிமையாளர்களிடம் தேவையான அளவு பணம் இல்லை. இதனால் சுமார் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட லாரிகளை ஓட்டாமல் நிறுத்தி வைத்துள்ளோம்.
  இதற்கு தீர்வு காணும் வகையில், தமிழக பொதுப்பணித் துறை ஏற்கெனவே அரசு நிர்ணயித்துள்ள விலையான 2 யூனிட் மணலுக்கு ரூ.1,000 வீதம் லாரி உரிமையாளர்களிடம் வங்கி வரைவோலை பெற்றுக்கொண்டு நேரடியாக குவாரிகளில் இருந்து மணல் வழங்க வேண்டும்.
  மேலும், மணல் விற்பனைக்கு வங்கி ஸ்வைப் இயந்திரங்கள் மூலம் பணம் பெற வேண்டும். அத்துடன் மணல் விற்பனை மூலம் ஊழலில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித் துறை அலுவலர்கள், ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  இதை வலியுறுத்தி டிசம்பர் 27-ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலகம் முன் கையில் வங்கி வரைவோலையுடன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai