சுடச்சுட

  

  ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் இயங்கும் அரசு மாணவர், மாணவியர் விடுதிகளில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
  நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட களங்காணி ஆதிதிராவிடர் நல அரசு மாணவர் விடுதி, சின்னகளங்காணி ஆதிதிராவிடர் நல அரசு மாணவியர் விடுதி, சேந்தமங்கலம் ஆதிதிராவிடர் நல அரசு மாணவர் விடுதி, மாணவியர் விடுதி, காளப்பநாய்க்கன்பட்டி ஆதிதிராவிடர் நல அரசு மாணவர் விடுதி ஆகிய விடுதிகளுக்கு நேரில் சென்ற மாவட்ட ஆட்சியர், அங்கு தங்கி பயின்று வரும் மாணவியர்களிடம் கலந்துரையாடினார்.
  விடுதி காப்பாளர்களிடம் காலையில் வழங்கப்பட்ட உணவு குறித்தும், மதியம் வழங்கப்படவுள்ள உணவு என்ன? என்பது குறித்தும் கேட்டறிந்து, மாணவர்களுக்கு வழங்குவதற்காக மதிய உணவு சமைக்கப்பட்டு வருவதையும், விடுதி அறைகளையும், கழிப்பிட வசதிகள், சமையலறை, பொருள்கள் இருப்பு அறை உள்ளிட்டவற்றையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
  புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட களங்காணி ஆதிதிராவிடர் நல அரசினர் மாணவர் விடுதியில் 81 மாணவர்களும், சின்னகளங்காணி ஆதிதிராவிடர் நல அரசினர் மாணவியர் விடுதியில் 81 மாணவியர்களும், சேந்தமங்கலம் ஆதிதிராவிடர் நல அரசினர் மாணவர் விடுதியில் 65 மாணவர்களும், சேந்தமங்கலம் ஆதிதிராவிடர் நல அரசினர் மாணவியர் விடுதியில் 74 மாணவியர்களும், காளப்பநாய்க்கன்பட்டி ஆதிதிராவிடர் நல அரசினர் மாணவர் விடுதியில் 31 மாணவர்களும் தங்கி 6-ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர்.
  இம்மாணவ, மாணவியர்களிடம் விடுதியில் தரமான உணவு வழங்கப்படுகின்றதா? என்பது குறித்தும், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாக இருக்கின்றதா? என்பது குறித்தும் ஆட்சியர் கேட்டறிந்தார்.
  அப்போது மாணவர்களிடம் ஆட்சியர் பேசியது, அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியர்களுக்கு சிறந்த விடுதி வசதிகள், விடுதிகளில் தரமான உணவு, மாணவ, மாணவியர்களுக்கு பாய், தலையணை, குளிப்பதற்கு சோப்பு, ஷாம்பு, எண்ணெய் போன்றவற்றை வாங்கி பயன்படுத்துவதற்கு மாதம் ரூ.50 பணம் போன்ற பல்வேறு வசதிகளையும் அரசு வழங்கி வருகிறது.
  மாணவ, மாணவியர்கள் அரசின் சலுகைகளை முழுமையாக பெற்று பயன்படுத்திக்கொண்டு, நன்றாக படித்து அதிக மதிப்பெண்களை பெற்று எதிர்காலத்தை சிறப்பாக உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்றார். ஆய்வின்போது மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கே.எஸ்.முரளிகிருஷ்ணன் உடனிருந்தார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai