சுடச்சுட

  

  மாணவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்: மு.க. ஸ்டாலின் பேச்சு

  By நாமக்கல்,  |   Published on : 19th December 2016 08:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மாணவர்கள் அரசியல்வாதியாகவும் வர வேண்டும், மாணவர்கள் அரசியலுக்கு வந்தால், அதை இருகரம் கூப்பி வரவேற்கும் முதல் நபராக நான் இருப்பேன் என்றார் திமுக பொருளாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின்.
   திமுக இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் அண்ணாவின் 108-ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கு பேச்சு, கட்டுரை, கவிதை ஒப்பித்தல் போட்டிகளின் இறுதிப் போட்டிகள் நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது.
   இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாணவர்களுக்குப் பரிசு வழங்கி திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியது:
   அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு திமுக இளைஞரணி அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை கவிதை ஒப்பித்தல் போட்டிகள் நடத்தப்படுகின்றன. முதல் கட்டமாக மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் தேர்வு செய்யப்பட்டவர்கள் மாநில அளவிலான இறுதிப் போட்டிக்கு அழைக்கப்படுகிறார்கள்.
   மாநில அளவில் முதல் இடம் பெறுபவர்களுக்கு ரூ. 25,000, இரண்டாம் இடத்தைப் பிடிப்பவர்களுக்கு ரூ. 15,000, மூன்றாம் இடத்தைப் பிடிப்பவர்களுக்கு ரூ. 10,000 பரிசு வழங்கப்படுகிறது. இதுபோல் மாவட்ட அளவில் முதல் இடத்தைப் பிடிப்பவர்களுக்கு ரூ. 10,000, இரண்டாம் இடத்தைப் பிடிப்பவர்களுக்கு ரூ. 5,000, மூன்றாம் இடத்தைப் பிடிப்பவர்களுக்கு ரூ. 3,000 பரிசு வழங்கப்படுகிறது.
   அண்ணா பிறந்த நாள் விழாக்களில் இதுவரையில் 4,857 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 3.79 கோடி அளவுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. அண்ணா, கருணாநிதி பிறந்த நாள் விழாக்களை முன்னிட்டு திமுக இளைஞரணி அறக்கட்டளை நடத்திய விழாக்களில் இதுவரை 17,961 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 6.70 கோடி அளவுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.
   2007-ஆம் ஆண்டு, நெல்லையில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநில மாநாட்டில், அந்த மாநாட்டிற்காக வசூலான தொகையில் ஒரு குறிப்பிட்ட தொகை, வங்கியில் வைப்பு நிதியாக செலுத்தி, அதன் மூலம் கிடைக்கும் வட்டி இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
   மாணவர்கள் லட்சியத்துடன் வாழ்ந்திட வேண்டும். நல்ல நிலைக்கு வர வேண்டும் என்று எண்ணும் மாணவர்கள், நாட்டு நலனையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மாணவர்கள் அரசியல்வாதியாகவும் வர வேண்டும். மாணவர்கள் அரசியலுக்கு வந்தால், அதை இருகரம் கூப்பி வரவேற்கும் முதல் நபராக நான் இருப்பேன். அரசு மட்டுமே அனைவருக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து விட முடியாது. மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளையும், ஆராய்ச்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
   முன்னதாக மு.க.ஸ்டாலின், நாமக்கல் பேருந்து நிலையம் அருகே புதுப்பிக்கப்பட்ட அண்ணா சிலையை திறந்துவைத்தார்.
   விழாவில் கழக துணைப் பொதுச் செயலர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி, மாநில இளைஞர் அணி இணைச்செயலர் மு.பெ.சுவாமிநாதன், நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பார்.இளங்கோவன், மேற்கு மாவட்டச் செயலர் கே.எஸ்.மூர்த்தி, முன்னாள் மத்திய இணை அமைச்சர் செ.காந்திசெல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai