சுடச்சுட

  

  ஆய்வு செய்வதாக வதந்தி: மினி பேருந்துகள் ஒரு மணி நேரம் நிறுத்தம்; பயணிகள் தவிப்பு

  By பரமத்தி வேலூர்,  |   Published on : 20th December 2016 10:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பரமத்தி வேலூரிலிருந்து முறையான வழித்தடத்தில் இயங்காத பேருந்துகளை பரமத்தி வேலூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ஆய்வு செய்வதாக வந்த வதந்தியையடுத்து, மினி பேருந்துகளை சுமார் ஒருமணி நேரத்துக்கும் மேலாக இயக்காமல் பரமத்தி வேலூர் பேருந்து நிலையத்தில் நிறுத்திவிட்டுச் சென்றதால், பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.
   பரமத்தி வேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதி கிராமப்புற மக்களின் வசதிக்காக பரமத்தி வேலூர் பேருந்து நிலையத்தில் இருந்து 12-க்கும் மேற்பட்ட மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. திங்கள்கிழமை காலை பரமத்தி வேலூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் முருகேசன் பரமத்தி வேலூர் பேருந்து நிலையம் பகுதிக்கு வந்துள்ளார். இதைப் பார்த்த சிலர் மினி பேருந்துகளை ஆய்வு செய்வதற்காக வந்துள்ளார் என நினைத்து, மினி பேருந்து ஓட்டுநர்கள் பரமத்தி வேலூர் பேருந்து நிலையத்திலேயே பேருந்துகளை நிறுத்திவிட்டுச் சென்றுவிட்டனர்.
   கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பரமத்தி வேலூரில் இருந்து கிராமப் புறங்களுக்கு இயக்கப்படும் மினி பேருந்துகள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் செல்லாமல், மாற்றுப் பாதையில் சென்று வருவதாக பரமத்தி வேலூர் வட்டார பேக்குவரத்து ஆய்வாளருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் உரிய வழித்தடத்தில் செல்லாத மினி பேருந்துகளுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்தார். இதனால் சில நாட்கள் மட்டும் உரிய வழித்தடத்தில் மினி பேருந்துகள் சென்று வந்தன.
   இந்த நிலையில், மீண்டும் உரிய வழித்தடங்களில் செல்லாமல் மாற்றுப் பாதையில் செல்லும் மினி பேருந்தின் ஓட்டுநர்கள் மீண்டும் அபராதம் விதிக்கப்படும் என எண்ணி, மினி பேருந்துகளை பேருந்து நிலையத்திலேயே நிறுத்திவிட்டுச் சென்றுவிட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கிராமப்புறங்களுக்குச் செல்லும் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.
   தகவலறிந்து அங்கு வந்த பரமத்தி வேலூர் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் முருகேசன் கிராமபுறங்களுக்கு வாகனங்களை இயக்குவதற்கு உரிய உரிமம் பெற்றுக்கொண்டு பேருந்துகளை இயக்காதது மிகவும் தவறு எனவும், காத்திருக்கும் பயணிகளை ஏற்றிக்கொண்டு மினி பேருந்துகளை இயக்க வேண்டும் எனக் கூறியதையடுத்து, வழக்கம்போல் மினி பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் சுமார் ஒரு மணி நேரம் கிராமப் புறங்களுக்குச் செல்லும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
   
   
   
   
   
   
   
   
   
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai