சுடச்சுட

  

  மணல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்: வங்கி வரைவோலை பெற்றுக்கொள்ள வலியுறுத்தல்

  By நாமக்கல்,  |   Published on : 20th December 2016 10:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வங்கி வரைவோலை மற்றும் ஸ்வைப் இயந்திரம் மூலம் பணம் பெற்றுக்கொண்டு மணல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மணல் லாரி உரிமையாளர்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
   நாமக்கல் மாவட்டம், மோகனூர் காவிரி ஆற்றில் அரசுக்குச் சொந்தமான மணல் குவாரி உள்ளது. இங்கு லாரிகள் மூலம் லோடு செய்யப்படும் மணல், வளையப்பட்டி சாலை ஊனாங்கல்பட்டியில் உள்ள மணல் இரண்டாம் விற்பனை நிலையத்தில் குவிக்கப்படுகிறது.
   அங்கிருந்து லோடு ஏற்றப்பட்டு, நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி போன்ற பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதற்கான தொகை ரொக்கமாக கொடுக்கப்பட்டு வருகிறது.
   இந்த நிலையில், மத்திய அரசு புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தததால், பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் லாரி உரிமையாளர்கள் பணத்தை கொடுத்து மணல் லோடு ஏற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
   இப் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், வங்கி வரைவோலை அல்லது ஸ்வைப் இயந்திரம் மூலம் பணத்தைப் பெற்றுக் கொண்டு லோடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மணல் லாரி உரிமையாளர்கள் திங்கள்கிழமை காலை 7 மணி முதல் மணல் ஏற்றாமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
   இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து மணல் லாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு நலச் சங்கத் தலைவர் ராஜசேகர், நாமக்கல் மாவட்ட அனைத்து மணல் லாரி உரிமையாளர் நலச் சங்கத் தலைவர் கைலாசம் ஆகியோர் கூறியது: மத்திய அரசின் நடவடிக்கையால், வங்கியில் பணம் பெற முடியவில்லை. அதனால் வங்கி வரைவோலை பெற்றுக்கொள்ள வேண்டும் அல்லது ஸ்வைப் இயந்திரம் மூலம் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ள வேண்டும்.
   லாரி உரிமையாளர்களிடம் பெறும் பணத்துக்கு, முறையான ரசீது வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
   இந்த கோரிக்கைகளைப் பரிசீலிப்பதாக சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் உறுதி அளித்ததை அடுத்து, மாலை 3 மணிக்கு, போராட்டம் திரும்பப் பெறப்பட்டது என்றனர்.
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai