சுடச்சுட

  

  கிலோ கணக்கில் மணல் விற்பனை செய்ய வலியுறுத்தல்

  By நாமக்கல்,  |   Published on : 22nd December 2016 08:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  எடை மேடை அமைத்து கிலோ கணக்கில் மணல் வழங்க வேண்டும் என தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் எஸ்.யுவராஜ் தெரிவித்தார்.
   நாமக்கல்லில் அவர் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டி: தமிழகத்தில் செயல்படும் மணல் குவாரிகளை பொதுப்பணித் துறையே ஏற்று நடத்தி, வங்கி வரைவோலை பெற்றுக்கொண்டு மணல் விற்பனை செய்யப்பட்டது.
   கடந்த 6 ஆண்டுகளாக மணல் இரண்டாம் விற்பனை கிடங்கு அமைக்க தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டு, அவர்கள் மூலம் மணல் விற்பனை செய்யப்படுகிறது.
   இரண்டாம் விற்பனை மையங்களில் அரசு நிர்ணயித்த அளவைக் காட்டிலும், கூடுதலாக லோடு செய்கின்றனர். அவ்வாறு ஏற்றிச் செல்லும் லாரிகளை கூடுதல் சுமை என பிடித்து அபராதம் விதிக்கின்றனர். வருவாய் துறையினர் பிடிக்கும்போது, ரூ.25,000 அபராதம் விதிக்கின்றனர். அதேபோல், போக்குவரத்துத் துறை ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை அபராதம் விதிப்பதுடன், லாரியை பறிமுதல் செய்கின்றனர்.
   தற்போது மத்திய அரசின் புதிய சட்டம், அதிகச் சுமை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு சுங்கச் சாவடிகளில் சோதனை நடத்தி 10 மடங்கு அபராதம் விதிக்க வழிவகை உள்ளது. அதனால், தொடர்ந்து லாரி உரிமையாளர்கள் பல்வேறு பிரச்னைகளைச் சந்திக்க வேண்டி உள்ளது.
   கூடுதல் சுமை ஏற்ற வற்புறுத்துவதே அரசுதான். தமிழகம் முழுவதும் கூடுதல் சுமை ஏற்றுவதை தடை செய்ய வேண்டும். உயர் நீதிமன்ற மதுரை கிளை கனிமப் பொருள்களை கிலோ கணக்கில் வழங்க வேண்டும் என்றும், யூனிட் கணக்கில் வழங்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது.
   தமிழகத்தில் உள்ள அனைத்து இரண்டாம் விற்பனை மையங்களில், எடை மேடை வைத்து கிலோ கணக்கில் மணல் விற்பனை செய்ய வேண்டும். கடந்த 19ஆம் தேதி சென்னை மண்டலத்தில் கூடுதல் சுமை ஏற்றுவதில்லை என முடிவு செய்யப்பட்டு, ஆர்க்காடு, விழுப்புரம், பண்ருட்டி ஆகிய குவாரிகளில், சரியான் எடையில் மணல் போடுகின்றனர்.
   அதேபோல், நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதிகளில் உள்ள இரண்டாம் விற்பனை மையங்களில் சரியான எடை அளவுக்கு மணல் போட வேண்டும். தமிழகத்தில் உள்ள 34 இரண்டாம் விற்பனை மையங்களிலும் எடைமேடை அமைத்து, மணலை கிலோ கணக்கில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
   கர்நாடக மாநிலத்துக்கு அதிக அளவில் மணல் கடத்திச் செல்லப்படுகிறது. இதனைத் தடுக்க அந்த மாநில எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும். அதேபோல், லாரிகளில் ஜிபிஆர்எஸ் கருவியைப் பொருத்தி கண்காணிப்பதன் மூலம் மணல் கடத்தலைத் தடுக்கலாம் என்றார்.
   முன்னதாக, கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலச் செயலர் வி.ராஜகோபால், பொருளாளர் ஜி.அகத்தியன், தமிழ்நாடு அனைத்து மணல் லாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு நலச் சங்கத் தலைவர் ராஜசேகர், நாமக்கல் மாவட்ட அனைத்து மணல் லாரி உரிமையாளர் நலச் சங்கத் தலைவர் கைலாசம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai