சுடச்சுட

  

  குடும்ப அட்டைதாரர்களுக்கு போதிய மண்ணெய்ணெய் வழங்கப்படாமல் அலைக்கழிப்பு

  By ராசிபுரம்,  |   Published on : 22nd December 2016 08:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராசிபுரம் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் ரேஷன் மண்ணெண்ணெய் போதிய இருப்பு இல்லாததால், பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் குடும்ப அட்டைதாரர்கள் அவதிக்குள்ளாயினர்.
   ராசிபுரம் வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம் தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 3 லிட்டர் மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால், கூட்டுறவு சங்கத்துக்கு மண்ணெண்ணெய் தேவைக்கு ஏற்றவாறு ஒதுக்கீடு செய்யப்படாததால், மாதம் 3 லிட்டர் வாங்கிய குடும்ப அட்டைதாரர்களுக்கு அடுத்த மாதம் மண்ணெண்ணெய் வழங்கப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, நவம்பர் மாதம் மண்ணெண்ணெய் வாங்கியிருந்தால், டிசம்பர் மாதம் வழங்கப்படாது. மீண்டும் ஜனவரி மாதம்தான் வழங்கப்படும் என கூட்டுறவு சங்க ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், ராசிபுரம் கூட்டுறவு விற்பனை சங்கத்துக்கு செவ்வாய்க்கிழமை மண்ணெண்ணெய் வாங்க வந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு, கடந்த மாதம் வாங்கியிருந்தால், அவர்களுக்கு மண்ணெண்ணெய் இல்லை என கூட்டுறவு சங்க ஊழியர்கள் கூறியதாகத் தெரிகிறது.
   இதனால் அங்கிருந்த குடும்ப அட்டைதாரர்கள் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, கூட்டுறவு சங்க அதிகாரிகள் அங்குவந்து பொதுமக்களை சமரசப்படுத்தி, அனைத்து அட்டைதாரர்களுக்கும் மண்ணெண்ணெய் வழங்கப்படும் என உறுதியளித்தனர். பின்னர் அனைவருக்கும் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டது.
   இதுகுறித்து கூட்டுறவு சங்க அதிகாரிகள் கூறுகையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க சுமார் 10 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய் மாதந்தோறும், தேவைப்படுகிறது. ஆனால் 7 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய் மட்டும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. எனவே, இதனைச் சமாளிக்க கடந்த மாதம் வாங்கியவர்களுக்கு அடுத்து வரும் மாதத்தில், ஏற்கெனவே வாங்காதவர்களுக்கு விநியோகம் செய்த பின்னர் 20-ம் தேதிக்கு பின்னர் இருப்புக்கு ஏற்றவாறு வழங்குகிறோம் என்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai