சுடச்சுட

  

  சுதாதாரமற்ற உணவு முறையால் ஆண்டுக்கு 5 லட்சம் பேர் உயிரிழப்பு

  By DIN  |   Published on : 25th December 2016 05:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சுகாதாரமற்ற உணவினால் ஏற்படும் நோய்களினால் சர்வதேச அளவில் ஆண்டுதோறும் 48 கோடி பேர் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் ஆண்டுக்கு 5 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர் என்றார் மருத்துவர் சக்கரவர்த்தி.
  ஈரோடு ரவுண்ட் டேபிள்-98 அமைப்பின் சார்பில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எக்ஸல் கல்வி நிறுவனங்களின் உணவு விடுதி பணியாளர்களுக்கான சுகாதார விழிப்புணர்வு கருத்தரங்கு கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
  ரவுண்ட் டேபிள் அமைப்பின் தலைவர் விவேக் நம்பீசன் தலைமை வகித்தார். செயலர் இளங்கவி, நிர்வாகிகள் விவேக் சந்தர், அஸ்வின், ரகு, ஞானபிரகாஷ், பிரவீன் முன்னிலை வகித்தனர்.
  எக்ஸல் பொறியியல் கல்லூரி முதல்வர் வி.கே.சண்முகநாதன், எக்ஸல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் ஈ.பழனிச்சாமி வாழ்த்திப் பேசினர். கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக ஈரோடு தோல் மருத்துவர் சக்கரவர்த்தி பங்கேற்றுப் பேசியது:
  சர்வதேச அளவில் ஆண்டுதோறும் 48 கோடி பேர் சுகாதாரமற்ற உணவினால் உருவாகும் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.
  இவர்களில் ஆண்டுக்கு 5 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இந்த நோயின் பாதிப்பு அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் மிகவும் குறைவாக இருக்கிறது. இதன் பாதிப்பு இந்தியாவிலும், ஆப்ரிக்க நாடுகளிலும் அதிகமாக இருக்கிறது. உணவுத்தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் நம்மால் மற்றவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்று நினைக்க வேண்டும். உணவு மாசுபாடு அடைவதால் வயிற்று, உதிரப்போக்கு, வாந்தி, ரத்த வாந்தி, காய்ச்சல், உடல் வலி, காசநோய், உயிரிழப்பு உள்ளிட்ட பல நோய்களுக்கு ஆளாகின்றனர்.
  குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், வயோதிகர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் ஆகியோர் இந்நோய் பாதிப்புக்குள்ளாவர். பொதுவாக உணவகங்களில் உணவு பரிமாறும் பணியாளர்கள் முறையாக சோப்பு போட்டு கைகளைக் கழுவ வேண்டும். கையுறை அணிந்தும், தலைக்குத் தனியாக தொப்பி அணிந்தும், சுத்தமான உடையுடனும் உணவு பரிமாற வேண்டும்.
  கைகளைக் கழுவிய பின் வேறு எதையும் தொடக் கூடாது. இருமல், சளி, காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் உணவு பரிமாறக் கூடாது. உணவு பரிமாறிய பின்னர் கைகளை மீண்டும் கழுவ வேண்டும்.
  சமையல் செய்பவர்கள் மட்டும் சுத்தமாக இருந்தால் போதாது. உணவு தயாராகும் இடம், உணவு பரிமாறும் இடம் ஆகிய இடங்கள் சுத்தமாக இருக்க வேண்டும். மேலும் உணவு வைத்திருக்கும் பாத்திரங்களும் சுத்தமாக இருக்க வேண்டும். சமைத்தபின் உணவு சமைக்கும் பாத்திரங்களை சுடு தண்ணீரினால் கழுவ வேண்டும்.
  தன் சுத்தம் மற்றும் இருப்பிட சுத்தம் ஆகியவை காரணமாக உணவினால் உருவாகும் நோய்களில் இருந்து நம்மையும், நம்மைச் சார்ந்தவர்களையும் காப்பாற்ற முடியும் என்றார். கருத்தரங்கில் எக்ஸல் கல்வி நிறுவனங்களின் உணவு விடுதி கண்காணிப்பாளர்கள், சமையலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai