சுடச்சுட

  

  நகராட்சி உருது துவக்கப் பள்ளிக்கு தனியே இடம் ஒதுக்கக் கோரிக்கை

  By நாமக்கல்  |   Published on : 26th December 2016 10:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நகராட்சி உருது துவக்கப் பள்ளிக்கு தனியாக நிலம் ஒதுக்கி புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
   இதுகுறித்து நாமக்கல் அஞ்சுமனே இஸ்லாமியா ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசல் தலைவர் கே.என்.ஷேக் நவீத், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மு.ஆசியா மரியத்திடம் அளித்த மனு விவரம்:
   நாமக்கல் நகரில் பள்ளிவாசல் வளாகத்தில் செயல்பட்டுவரும் நகராட்சி உருது துவக்கப் பள்ளிக்கு தனியாக நிலம் ஒதுக்கி, கட்டடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்துக்கு தனியாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அல்லது நாமக்கல் மாவட்ட தலைமையிட பள்ளிவாசலாக செயல்பட்டுவரும் அஞ்சுமனே இஸ்லாமியா ஜாமியா பள்ளிவாசலுக்கு பாத்தியப்பட்ட இடத்திலேயே இட ஒதுக்கீடு செய்து, வக்பு வாரியம் அமைத்துத் தர வேண்டும்.
   நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிவாசல்கள், தர்காக்களுக்கு, சிறுபான்மையினரின் அரசு சம்பந்தமான சொத்துகளின் வருவாய்த் துறை ஆவணங்கள் பட்டா, சிட்டா போன்ற ஆவணங்களை முறைப்படுத்த ஒவ்வொரு வட்டாட்சியர் மற்றும் நில அளவையர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருக்கு தகுந்த உத்தரவு பிறப்பித்து, ஆவணங்களைத் தயார் செய்து கொடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
   சிறுபான்மையினருக்கு பணம் இருப்பு இல்லா சேமிப்புக் கணக்குத் தொடங்க இந்தியன் வங்கியின் மேலாளருக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் சிறுபான்மை மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை ஆகியவை ஒரு சிலருக்கு நிறுத்தப்பட்டுள்ளன. அவர்களுக்கும் மீண்டும் உதவித்தொகை கிடைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
   சிறுபான்மையினர் நலத் திட்டங்கள் அனைவரிடத்திலும் சென்றடைய ஏதுவாக, பள்ளிவாசல்கள், தர்காக்களின் நிர்வாகிகளை நேரில் அழைத்து நலத் திட்டங்கள் குறித்த உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும். நாமக்கல் நகரம், மஜீத் தெரு, அஜீஸ் தெரு, ராஜாஜி பள்ளி தெரு, சேந்தமங்கலம் தெரு ஆகிய பகுதிகளில் கடந்த பல நாள்களாக மோட்டார் சைக்கிள்கள், கோழிகள் திருட்டு சம்பவம் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து போலீஸார் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai