சுடச்சுட

  

  ராசிபுரம் அருகே நிகழ்ந்த இருவேறு சாலை விபத்துகளில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பக்தர் உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச் சம்பவம் திங்கள்கிழமை நிகழ்ந்தது.
   திருச்சி சந்தைக்கு காய்கறிகளை ஏற்றிக் கொண்டு ஒசூரிலிருந்து லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டகளூர்கேட் அடுத்த புறவழிச்சாலை சந்திப்பு அருகே சென்ற கொண்டிருந்தது.
   இந்த லாரியை கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (26) என்பவர் ஒட்டிச் சென்றார். இதே போல், மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நால்வர் காரில் ராமேஸ்வரம், மதுரை பகுதியில் உள்ள கோயில்களுக்குச் சென்றுவிட்டு, சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், இந்த கார் தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டகளூர்கேட் அணைப்பாளையம் பகுதியில் வந்தபோது, நிலை தடுமாறி சாலைத் தடுப்பைத் தாண்டி, எதிரே காய்கறி ஏற்றிவந்த லாரி மீது மோதியது. இதில், லாரி தலைகீழாகக் கவிழ்ந்தது. காய்கறிகள் சாலையில் உருண்டோடின. இந்த விபத்தில் லாரியின் டீசல் டேங்கரில் உராய்வு ஏற்பட்டதால், லாரி முற்றிலும் தீப்பற்றி எரிந்தது. சம்பவ இடத்துக்கு தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டு, மேலும் தீ பரவாமல் தடுத்தனர்.
   இந்த விபத்தில் காரில் பயணம் செய்த மத்திய பிரதேச மாநிலம், கோல்கோரி பகுதியை சேர்ந்த தினேஷ் கெட்டியா (45) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் காரில் இருந்த பீமா சங்கர் சாஸ்திரி (42), பிரலாத் முக்தி (40), அனில் பிரசாத் சர்மா (34) ஆகிய மூவர் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை போக்குவரத்து பாதித்தது. இந்த விபத்து குறித்து ராசிபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
   டிராக்டர் மோதி டெய்லர் பலி: வெண்ணந்தூர் அருகே நடந்த மற்றொரு விபத்தில் டிராக்டர் பின் சக்கரத்தில் சிக்கி டெய்லர் ஒருவர் திங்கள்கிழமை உயிரிழந்தார். வெண்ணந்தூர் அருகேயுள்ள மின்னக்கல் வடுகம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (41), டெய்லர். அவர் வீட்டிலிருந்து ஆதார் அட்டை பதிவுசெய்ய இரு சக்கர வாகனத்தில் ரேஷன் கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ் வழியே சென்று கொண்டிருந்த டிராக்டரை முந்திச் செல்ல முற்பட்டார்.
   திடீரென டிராக்டர் திருப்பத்தில் எதிர்பாராமல் திரும்பியதால், ராமகிருஷ்ணன் டிராக்டர் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
   இது குறித்து வெண்ணந்தூர் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai