சுடச்சுட

  

  ஜன. 6-இல் சென்னையில் மணல் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

  By நாமக்கல்,  |   Published on : 28th December 2016 09:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மணல் விற்பனைக்கு ஸ்வைப் இயந்திரம், ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் முறையை நடைமுறைப்படுத்தக் கோரி வரும் ஜனவரி 6-ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்ல. ராசாமணி தெரிவித்தார்.
   நாமக்கல்லில் அவர் செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி: மணல் இரண்டாம் விற்பனை மூலம் தனியார் அதிக விலைக்கு மணலை விற்பனை செய்வதாலும், மணலுக்காக புதிய ரூபாய் நோட்டுகளைக் கேட்பதாலும், உள்ளூர் லாரி உரிமையாளர்களுக்கு முன்னுரிமை கொடுத்து மணல் லோடு செய்வதாலும் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 70,000-க்கும் மேற்பட்ட மணல் லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
   மணல் இரண்டாம் விற்பனையில் ஏற்பட்ட ஊழலின் காரணமாக சேகர் ரெட்டி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்களும், அரசு அதிகாரிகளும் வருமான வரித் துறை சோதனையில் சிக்கியுள்ளனர். எனவே, தமிழகம் முழுவதும் உள்ள பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான மணல் குவாரிகளில் மணல் லாரி உரிமையாளர்களிடம் ஏற்கெனவே அரசு நிர்ணயித்துள்ள விலையான 2 யூனிட் மணலுக்கு ரூ.1,000 மற்றும் 3 யூனிட் மணலுக்கு ரூ.1,500 வீதம் வங்கி வரைவோலை பெற்றுக்கொண்டு நேரடியாக மணல் வழங்க வேண்டும்.
   மத்திய அரசு பணத்துக்குப் பதிலாக டிஜிட்டல் முறையைக் கையாள வேண்டும் என்று வலியுறுத்தி வருவதால், மணலுக்கான பணத்தை ஸ்வைப் இயந்திரம் மூலம் பெற வேண்டும். மேலும், ஆன்லைன் மூலம் மணல் பதிவு செய்யும் முறை அமல்படுத்தப்பட்டால், தமிழகம் முழுவதும் உள்ள மணல் லாரி உரிமையாளர்கள் மிக எளிதாக மணலுக்கான பணத்தைச் செலுத்தி லாரிகளுக்கான வரிசை எண்ணையும் ஆன்லைன் மூலம் பெற முடியும்.
   மிகச் சிறிய தொகைக்கான வரவு செலவுக்குக்கூட ஆன்லைன் மூலம் பணம் செலுத்த வலியுறுத்தும் மத்திய அரசின் விதிகளுக்கு ஏற்ப, மாநில அரசு மணலுக்கான தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்தினால், மணல் வியாபாரத்தில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுப்பதுடன், அனைத்து லாரிகளுக்கும் ஆன்லைன் வரிசைப்படி மணல் வழங்க முடியும்.
   மேலும், தமிழக அரசு மணல் வாரியம் அமைத்து தேவைப்படும் இடங்களில் பொதுப்பணித் துறையே மணல் குடோன்கள் அமைத்து இரண்டாம் விற்பனை செய்வதன் மூலம் அதிக வருமானத்தைப் பெற முடியும்.
   மாநில அரசு மணல் லாரிகளுக்கு ஒரே வரிசை, ஒரே விலை, கொடுக்கும் பணத்துக்கு ரசீது மற்றும் மணலுக்கான பணத்தை வங்கி வரைவோலை, ஸ்வைப் இயந்திரம் அல்லது ஆன்லைன் முறையில் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் ஜனவரி 6-ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித் துறை முதன்மைப் பொறியாளர் அலுவலகம் முன் சம்மேளனத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai