சுடச்சுட

  

  மோகனூர் காவிரி ஆற்று மணல் குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும்: விவசாயிகள் சரமாரி புகார்

  By நாமக்கல்,  |   Published on : 28th December 2016 09:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மோகனூர் காவிரி ஆற்றில் அரசு விதிமுறைகளை மீறி 200 ஹெக்டேர் அளவுக்கு மணல் அள்ளப்பட்டுள்ளதால் விவசாயம், குடிநீர் ஆதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே மணல் குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும் என அமைதி பேச்சுவார்த்தையில் விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் அரசு அதிகாரிகள் மீதும் விவசாயிகள் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தனர்.
   நாமக்கல் மாவட்டம், மோகனூர் நவலடியான் கோயில் அருகே அரசு மணல் குவாரி செயல்படுகிறது. அந்தக் குவாரியில் அள்ளப்படும் மணல், மோகனூர் அருகே செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள இரண்டாம் விற்பனை நிலையத்தில் கொட்டப்படுகிறது. பின் அங்கிருந்து மணல் விற்பனைக்குக் கொண்டு செல்லப்படுகிறது.
   அந்த இரண்டாம் விற்பனை நிலையத்தில் மணலை லாரியில் ஏற்றி இறக்கும் பணியில் செவிட்டுரங்கன்பட்டி சுற்றுவட்டார கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 23-ஆம் தேதி மணல் இரண்டாம் விற்பனை நிலையத்தில் உள்ள தொழிலாளர்களுக்குக் கூலித் தொகை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
   இதையடுத்து முறையான கூலித்தொகை வழங்க வலியுறுத்தி, தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இரண்டாம் விற்பனை நிலைய அலுவலகத்துக்கு தீ வைக்கப்பட்டதுடன், மேசை, நாற்காலி உள்ளிட்டவையும் அடித்து உடைக்கப்பட்டன.
   இதையடுத்து மணல் குவாரியிலிருந்து மணல் எடுப்பது தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
   பிரச்னை முடிவுக்கு வராத நிலையில் கடந்த 24-ஆம் தேதி குவாரியிலிருந்து லாரி மூலம் மணல் கொண்டு செல்வதைக் கண்ட தொழிலாளர்கள் லாரியின் கண்ணாடியை அடித்து நொறுக்கியதுடன், மணலை சாலையில் கொட்டிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மோகனூர் காவிரி ஆற்று மணல் குவாரியையும் மூட வேண்டும் எனவும், வலியுறுத்தினர்.
   பேச்சுவார்த்தை: இந்தப் பிரச்னை தொடர்ந்ததால் மணல் இரண்டாம் விற்பனையாளர்கள் மற்றும் மோகனூர் பகுதி விவசாயிகளிடையே நாமக்கல் கோட்டாட்சியர் எம். ராஜசேகரன் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
   அதில் பங்கேற்ற விவசாயிகள் தெரிவித்த கருத்துகள் விவரம்:
   எஸ். மாதேஸ்வரன் (கொ.ம.தே.க. மாவட்டச் செயலர்): மோகனூர் காவிரி ஆற்று மணல் குவாரியில் அரசு கொடுத்த அனுமதியை மீறி மணல் அள்ளப்பட்டுள்ளது.
   ராமசாமி (ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்): ஒருவந்தூர் பகுதியில் காவிரி ஆற்றில் பெரிய ராயர் திட்டு உள்ளது. அதில் தண்ணீர் ஊறி வெளியேறும். அதன்மூலம் காட்டுப்புத்தூர் விவசாய நிலம் பாசன வசதி பெற்று வந்தது. அந்த மணல் அணையில் மண் அள்ளப்பட்டதால், காட்டுப்புத்தூர் வாய்க்கால் தற்போது வறண்டு விளைநிலம் பாதிக்கும் நிலையில் உள்ளது.
   நவலடி (மோகனூர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர்): மோகனூர் காவிரி ஆற்று மணல் குவாரியில் அரசு அனுமதித்த அளவைத் தாண்டி 200 ஹெக்டேர் பரப்பளவில் மணல் எடுக்கப்பட்டுள்ளது. ஆற்றில் 3 அடிக்கு மேல் மணல் எடுக்கக் கூடாது. ஆனால், 35 அடி ஆழம் வரை மணல் அள்ளப்பட்டுள்ளது. ரூ.600 கோடி மதிப்பில் மணல் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால், அரசுக்கு 3,200 யூனிட் மணல் எடுக்கப்பட்டதாக கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது என்றார்.
   நவலடி (விவசாய சங்க பிரதிநிதி): குவாரியில் 30 அடி வரை மணல் எடுத்ததால் குடிநீருக்குக் கூட தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட்டால்கூட மோகனூருக்கு தண்ணீர் வராது என்றார்.
   ராஜாகண்ணு(ஆரியூர்): கடந்த மூன்றரை ஆண்டுகளில் மோகனுôர் காவிரி ஆற்றில் என்ன நடக்கிறது என்றே அதிகாரிகள் கண்காணிக்கவில்லை. பல ஆண்டு போராடி பெற்ற மோகனூர்-வாங்கல் பாலம் மணல் அள்ளியதால் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. ஆற்றில் குடிநீருக்காக அமைக்கப்பட்ட தொட்டிகள் விழுந்துவிடும் என்றார்.
   இதுபோல் கூட்டத்தில் பேசிய விவசாயிகள் பலரும் காவிரி ஆற்று மணல் குவாரியில் விதிமுறை மீறப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினர். மேலும் காவிரியில் உள்ள மணல் குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
   அதைத்தொடர்ந்து மணல் இரண்டாம் விற்பனை மையப் பொறுப்பாளரான புதுக்கோட்டை வெற்றி பேசியது:
   பரமத்தி வேலூர் முதல் மோகனூர் வரை காவிரி ஆற்றில் பாறை உள்ளது. அதனால் 30 அடி ஆழம் வரை மணல் எடுக்க முடியாது. அரசு விதிமுறைப்படி 2 பொக்லைன் மட்டுமே ஆற்றில் உள்ளது. அரசு விதிமுறைப்படி குவாரி செயல்படுகிறது. அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து கொள்ளலாம் என்றார்.
   தகராறு: அவர் பேச்சின்போது தெரிவித்த சில கருத்துகளுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் குவாரியை பொதுப்பணித் துறையினர் நடத்துகின்றனர். இவருக்கும், குவாரிக்கும் சம்பந்தமே இல்லை. எதற்காக இவர் பதில் அளிக்க வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. அவர்களை அதிகாரிகள் சமரசம் செய்தனர்.
   29-ஆம் தேதி ஆய்வுக் கூட்டம்: அதைத்தொடர்ந்து கோட்டாட்சியர் எம்.ராஜசேகரன் பேசுகையில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொள்கின்றனர். மாவட்டத்தில் செயல்படும் மணல் குவாரிகள் தொடர்பாக ஒவ்வொரு மாதமும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. இம்மாதம் 29-ஆம் தேதி ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் விவசாயிகள் கூறிய கருத்துகள் தெரிவிக்கப்படும்.
   மேலும் குவாரியில் புலத் தணிக்கை மேற்கொள்ளப்படும். அதன்பின் பிரச்னை தொடர்பாக முடிவு செய்து கொள்ளலாம். அதுவரை குவாரியில் மணல் எடுப்பது நிறுத்தம் செய்யப்பட்ட நடவடிக்கை தொடரும். தற்போது அங்கு என்ன நிலைமை உள்ளது என அதிகாரிகள் மூலம் பார்வையிடப்படும் எனத் தெரிவித்தார். அதை விவசாயிகள், மணல் இரண்டாம் விற்பனை மையத்தினர் ஏற்றுக் கொண்டனர். கூட்டத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளர் தாமரைச்செல்வன், பொதுப்பணித் துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai