சுடச்சுட

  

  தேவையான அளவு பணம் வழங்கக் கோரி வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

  By DIN  |   Published on : 29th December 2016 05:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வங்கிகளுக்குத் தேவையான அளவு பணம், அனைத்து வங்கிகளுக்கும் சீரான அளவு பணம் விநியோகம் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல்லில் வங்கி ஊழியர்கள் புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  நாமக்கல்-மோகனூர் சாலை கனரா வங்கி அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, நாமக்கல் மாவட்ட வங்கி ஊழியர் சங்கச் செயலர் கண்ணன் தலைமை வகித்தார். கிருஷ்ணன், வெங்கடசுப்பிரமணியன், முருகேசன் ஆகியோர் பேசினர்.
  போராட்டம் குறித்து சங்க நிர்வாகிகள் கூறியது, வங்கிகளில் பணத் தட்டுப்பாடு தொடர்ந்து நீடிப்பதால், பொதுமக்களுக்கும், வங்கி ஊழியர்களுக்கும் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. அதனால், வங்கிகளுக்குத் தேவையான அளவு பணம் பட்டுவாடா செய்ய வேண்டும். தனியார் வங்கிகளுக்கு கூடுதலாக பணம் விநியோகிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. எவ்வளவு தொகை வழங்கப்படுகிறது என்பதை ரிசர்வ் வங்கி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
  அனைத்து ஏ.டி.எம்.களும் உடனே இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரும் செல்வந்தர்களிடம் கோடிக்கணக்கான புதிய ரூபாய் நோட்டுகள் சிக்கியதில் இருந்து வங்கிகள் மீது சந்தேகம் திரும்பி உள்ளது. புதிய ரூபாய் நோட்டுகள் சிக்கியது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.
  எந்த வங்கிகளிடம் இருந்து பணம் பெறப்பட்டது என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதாரண வங்கிக் கிளைகள் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு இவ்வளவு பெரிய தொகை வழங்க இயலாது.
  எனவே, புதிய ரூபாய் நோட்டு விநியோகத்தில் ஏதோ மர்மம் அடங்கி உள்ளது. பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் வங்கி வாடிக்கையாளர்கள், பொதுமக்கள், வங்கி ஊழியர்கள் பலர் உயிர் இழந்துள்ளனர். அந்த குடும்பங்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும்.
  மேலும், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை நிதியமைச்சருக்கு கடிதம் எழுதவும், ஜனவரி 2-ஆம் தேதி கோரிக்கை அட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபடவும், 3-ஆம் தேதி அனைத்து மாநில தலைநகரங்களிலும் ரிசர்வ் வங்கி முன்னர் முற்றுகைப் போராட்டம் நடத்தவும், பின்னர் தேவைப்பட்டால் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai