சுடச்சுட

  

  புதிய தலைமைச் செயலர் நியமனத்தில் தைரியமாகச் செயல்பட்டுள்ளார் தமிழக முதல்வர்: ஹெச். ராஜா பேட்டி

  By DIN  |   Published on : 29th December 2016 05:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதிய தலைமைச் செயலர் நியமனத்தில் முதல்வர் தைரியத்துடன் செயல்பட்டுள்ளார் என பாஜக தேசியச் செயலர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
  தீனதயாள் உபாத்யாய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நாமக்கல்லில் பாஜக சார்பில் 3 நாள்கள் நடத்தப்பட்ட மாநில அளவிலான பயிற்சி முகாம் நிறைவு நாள் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
  இம் முகாமில் கலந்துகொண்ட ஹெச்.ராஜா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: உறுதியான தகவலின் அடிப்படையிலேயே ராம மோகன ராவ் வீட்டில் சோதனை நடந்தது. பொதுவாக ஒரு சோதனை நடந்தால், அங்கு கிடைக்கும் விவரங்கள் மூலம் அடுத்தடுத்த சோதனை நடக்கும். அந்த அடிப்படையில்தான் அவர் வீடு, அவரது மகன் வீடு, சித்தூரில் உள்ள அவரது சம்பந்தி வீடு உள்ளிட்ட 13 இடங்களில் சோதனைகள் நடந்தன. ஆனால், 4 நாள்களாக மருத்துவமனையில் இருந்த ராம மோகன ராவ், இப்போது இதுகுறித்து பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. முதல்வருக்கு இட மாறுதல் கொடுப்பதற்கு உறுதியில்லை என ராம மோகன ராவ் பேசியுள்ளார். யாரோ அவர் பின்னால் உள்ளனர். அவரது பணி விதிமுறைக்கு எதிராக அவர் பேசியுள்ளார். அவரது பேட்டிக்காகவே அவரை கைது செய்ய முடியும். முதல்வர் பன்னீர்செல்வம், தைரியத்துடன் செயல்பட்டு புதிய தலைமைச் செயலரை நியமனம் செய்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவு அறிவிப்புக்கு முன்னதாக அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் பன்னீர்செல்வத்தை முதல்வராகத் தேர்ந்தெடுத்துள்ளனர். மத்திய அரசு, மாநில அரசோடு சுமூக உறவு வைத்துக் கொள்ள விரும்புகிறது. பன்னீர்செல்வம்தான் மக்கள் பிரதிநிதி. அதைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு
  செயல்படும். வருமானத்துக்கு அதிகமாக பணம் வைத்திருந்தால் வருமான வரித் துறை சோதனை நிச்சயம் நீடிக்கும். ப.சிதம்பரம் கருப்புப் பணம் உருவாக்குகிறாரா என்பதை அவர் தெளிவுப்படுத்த வேண்டும். கருப்பு பணம் வந்ததற்கு காரணமே காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சிதான். ஏனெனில், 2004-ஆம் ஆண்டு கருப்புப் பண மதிப்பீடு வெறும் 2.5 சதவீதம்தான். ஆனால் 2014-ஆம் ஆண்டு கருப்புப் பணம் பற்றிய மதிப்பீடு 25 சதவீதம். அதுமட்டுமல்ல, உயர் மதிப்பு கொண்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளின் பங்கு 2004-ஆம் ஆண்டு 25 சதவீதமாகத்தான் இருந்தது. 2014-ஆம் ஆண்டு அது 86 சதவீதமாக உயர்ந்தது.
  கடந்த 40 நாள்களில், 5 லட்சம் கோடி புதிய ரூபாய் நோட்டு வங்கிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. இ-பேங்கிங், பணமில்லா பரிவர்த்தனைக்கு மக்கள் மாறி வருகின்றனர். சரளமான பணப் புழக்கத்துக்கு ரூ.9 லட்சம் கோடி தேவைப்படுகிறது. ஜனவரி மாத இறுதிக்குள் சகஜமான சூழல் ஏற்படும் என்றார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai