சுடச்சுட

  

  ராம மோகன ராவுக்கு ஆதரவாக அ.தி.மு.க. செயல்படுகிறது : இல.கணேசன் குற்றச்சாட்டு

  By DIN  |   Published on : 29th December 2016 05:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  முன்னாள் தலைமைச் செயலர் ராம மோகன ராவுக்கு ஆதரவாக அதிமுக செயல்படுகிறது என பாஜக மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் குற்றஞ்சாட்டினார்.
  தீனதயாள் உபாத்யாய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாமக்கல்லில் பா.ஜ.க. சார்பில் மாநில அளவிலான பயிற்சி முகாம் நிறைவு நாள் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. அந்த பயிற்சி முகாமில் கலந்துகொண்ட இல.கணேசன், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: பிரதமர் மோடியின் நடவடிக்கை காரணமாக பா.ஜ.க.வுக்கு ஆதரவான சூழல் நிலவி வருகிறது. பா.ஜ.க.வில் உறுப்பினர்களைச் சேர்க்கும் நோக்கில் தீவிர பணியில் உறுப்பினர் இயக்கம் துவக்கப்பட்டு, பணிகள் தீவிரமாக நடந்துவருகின்றன.
  தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்தது வேதனையானது. அடுத்தவர்களின் பலவீனத்தில் வளரும் கட்சி பா.ஜ.க. அல்ல. மக்களிடம் பா.ஜ.க.வுக்கு ஆதரவு பெருகி வருகிறது.
  ரூ.500, ரூ.1,000 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் பொதுமக்கள் அவதிப்பட்டது உண்மைதான். ஆனால், நாட்டின் வளர்ச்சிக்காக மக்கள் அதனை ஏற்றுக் கொண்டனர். தலைமைச் செயலர் வீட்டிலேயே பாஜக அரசு கைவைத்தது என்றால், வேறு எவர்மீதும் கைவைக்க இந்த அரசு தயங்காது என மத்திய அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
  முன்னாள் தலைமைட் செயலர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் பணம், தங்கம் கிடைத்தது என ஊடகங்கள் தெரிவித்தன. இந்த பட்டியலுக்கு பதில் அளிக்காமல், அவருக்கு ஆதரவாக அ.தி.மு.க.வைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், துணை ராணுவத்தை அழைத்து கொண்டு தலைமைச் செயலர் வீட்டுக்குச் சென்றது ஏன் என கேள்வி கேட்டுள்ளார். இதையெல்லாம் பார்க்கும்போது ராம மோகன ராவுக்கு அ.தி.மு.க. அரசு ஆதரவாகச் செயல்படுகிறது என்பதைக் காட்டுகிறது.
  ஜெயலலிதாவுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவர் பேசியுள்ளார் என்பதை அ.தி.மு.க.வினர் புரிந்துகொள்ள வேண்டும். இதனால் ராம மோகன ராவை அ.தி.மு.க. கண்டிக்க வேண்டும்.
  கூட்டணி குறித்து மக்களவைத் தேர்தல் வரும்போதுதான் சிந்திக்க வேண்டும். அதிமுக நல்லது செய்தால் பாராட்டுவோம், கெட்டது செய்தால் கண்டிப்போம்.
  பல லட்சங் கோடி ரூபாய் ஊழல் நடந்த போதெல்லாம் சில காலம் நிதியமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். அவர் நிதியமைச்சராக இருந்த காலத்தில்தான் ஊழல் பெருகியது. அவர் செய்யும் விமர்சனங்கள் எங்கேயும் எடுபடாது.
  ஜனவரி 1ஆம் தேதிக்குப் பின்னர் மோடி அரசின் அதிரடி நடவடிக்கை மேலும் தொடரும். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பதில் மற்ற கட்சிகளைவிட, மத்திய பா.ஜ.க. அரசு தீவிரமாக உள்ளது.
  அதிமுக பொதுச் செயலர் தேர்வில் ஏதோ ஒரு முடிவு எடுத்துவிட்டார்கள் என்பது தெரிகிறது. ஆனால், யதேச்சையான முடிவாக இல்லாமல் மக்கள் ஆதரவோடு நடைபெறும் முடிவாக ஒரு தோற்றம் வர வேண்டும் என்பதற்காக பல பேர் மூலம் அறிக்கை வெளியிடச் செய்கின்றனர்.
  ஆனால், கட்சியைப் பொருத்தவரையில் கட்டுப்படுத்தக்கூடிய திறமையும், சக்தியும் சசிகலாவுக்கு உண்டு. இதனால் அவர் கட்சியின் பொதுச் செயலராகலாம். ஆனாலும் அது, அதிமுக உள்கட்சிப் பிரச்னை. இல்லாத கூட்டணியில் இருந்து வைகோ விலகி விட்டார் என்றார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai