சுடச்சுட

  

  கைத்தறி மற்றும் துணி நூல் துறையில் விசைத்தறியையும் இணைக்கக் கோரிக்கை

  By நாமக்கல்,  |   Published on : 30th December 2016 09:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழக அரசு கைத்தறி மற்றும் துணி நூல் துறையில் விசைத்தறி தொழிலையும் இணைத்து விசைத்தறி தொழிலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட விசைத்தறி மற்றும் ஜாப் ஒர்க்கர்ஸ் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
   நாமக்கல் மாவட்டத்தில் ஏராளமான சிறு, குறு விசைத்தறியாளர்கள் உள்ளனர். ஜவுளி உற்பத்தியாளர்களிடம் நூல் வாங்கி கூலிக்கு துணி உற்பத்தி செய்து வழங்கி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக அடப்பு கூலி குறைந்துவரும் நிலையில் விசைத்தறி மற்றும் ஜாப் ஒர்க்கர்ஸ் சங்கம் என்ற பெயரில் புதிய சங்க அமைப்புக் கூட்டம் புதன்கிழமை பள்ளிபாளையம் காவேரி ஆர்.எஸ் பகுதியில் நடைபெற்றது.
   இக் கூட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பள்ளிபாளையம் தெற்கு ஒன்றியச் செயலாளர் கே.மோகன் தலைமை வகித்தார். சங்கத் தலைவராக கே.குமார், செயலராக ஆர்.அறிவழகன், பொருளாளராக எல்.பி.பாபு, துணை தலைவர்களாக ஆயக்காட்டூர் மணி, குமாரபாளையம் சண்முகம், துணை செயலாளர்களாக பள்ளிபாளையம் சரவணன், திருச்செங்கோடு விஜயபாரதி, மற்றும் 11 பேர் கொண்ட நிர்வாகக் குழு தேர்வு செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அசோகன் வாழ்த்திப் பேசினார்.
   நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விசைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ச்சியாக அடப்புக் கூலி குறைக்கப்பட்டு வருவதைத் தடுக்க தமிழக அரசு குறைந்தபட்ச கூலி சட்டத்தில் இணைத்து அரசு ஆணை வெளியிட வேண்டும். தமிழகம் முழுவதும் நடைபெற்றுவரும் கணக்கெடுப்புப் பணியை முறையாக நடத்தி விசைத்தறியாளர்களுக்கு சான்றிதழ் வழங்க வேண்டும்.
   விசைத்தறிகளுக்கு மின் கட்டணம் வசூல் முறையில் உள்ள ஸ்லாப் முறையை நீக்கி, ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்தப்படுவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். இலவச வேட்டி, சேலை மற்றும் பள்ளி சீருடை தயாரிக்கும் பணியை நேரடியாக விசைத்தறியாளர்களுக்கு வழங்க வேண்டும். வங்கிகள் நிபந்தனையின்றி கடனுதவி வழங்க வேண்டும்.
   மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஜவுளி உற்பத்தியாளர்கள், சிறு, குறு விசைத்தறியாளர்கள் மற்றும் தொழிலாளர் பிரதிநிதிகள் அடங்கிய குறைதீர் கூட்டம் நடத்தி தொழிலைப் பாதுகாக்க வேண்டும்.
   இக் கூட்டத்தின் நிறைவாக பிரகாஷ் நன்றி கூறினார்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai